திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள உதய மார்த்தாண்டபுரம் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் கடந்த 10 ஆண்டுகளாக தேசிய திறனாய்வு தேர்வில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். கடந்த 10 ஆண்டுகளில் 29 மாணவ மாணவிகள் இந்த தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்று மத்திய அரசின் கல்வி உதவித் தொகையை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பள்ளியில் மொத்தம் 180 மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த வருடத்திற்கான தேசிய திறனாய்வு தேர்வினை இந்த பள்ளியைச் சேர்ந்த 14 மாணவ மாணவிகள் எழுதினர். இதில் ரானேஷ், தீனா, ரித்தீஷ், லோகேஷ் என்கிற நான்கு மாணவர்களும் சந்திர பாலா, தேவஸ்ரீ என்கிற இரண்டு மாணவிகளும் வெற்றி பெற்றுள்ளனர். இந்த வெற்றியின் மூலம் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை மாதத்திற்கு ஆயிரம் ரூபாய் கல்வி உதவித்தொகை அவர்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில் 10 ஆண்டுகளாக தேசிய திறனாய்வு தேர்வில் இந்த அரசு பள்ளி சாதித்து வருவதை சுட்டிக்காட்டி தலைமை ஆசிரியர் உள்ளிட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்தும் மேலும் இந்த வருடம் வெற்றி பெற்ற ஆறு மாணவ, மாணவிகளுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்ததுடன் நேரில் வந்து அவர்களை பார்க்க வேண்டும் என்கிற ஆசையை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் காணொளியாக வெளியிட்டுள்ளார்.

 

நடிகர் சூரி வெளியிட்ட இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் சூரியின் நண்பரான கத்துக்குட்டி பட இயக்குனர் சரவணன் என்பவரின் மனைவி கலா என்பவர் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக  இந்த காணொளியை அவர் வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

 

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ளது உதயமார்த்தாண்டபுரம். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 180 மாணவ, மாணவியர்கள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் மத்திய அரசால் நடத்தப்படும் தேசிய திறனாய்வு தேர்வில் கடந்த 10 ஆண்டுகளாக இதுவரை 29 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாண்டு 14 மாணவர்கள் கலந்துகொண்டு 6 மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனை கேள்விப்பட்ட நடிகர் சூரி தேர்வில் பங்கேற்ற மாணவர்களும் அதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் பரிசுகள் வழங்கி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அந்த பள்ளி மாணவர்களை நேரில் சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.