அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் சுபாஇளவரசன். இவர் வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர். தமிழ்நாடு விடுதலைப்படை எனப்படும் அமைப்பின் தலைவராக விளங்கிய சுபா இளவரசன், கடந்த கால அ.தி.மு.க., அரசின் அதிரடி நடவடிக்கை காரணமாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில ஆண்டு சிறைவாசத்துக்கு பிறகு விடுதலையாகி வெளியே வந்த சுபா இளவரசன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழர் நீதிக்கட்சி எனப்படும் புதிய அரசியல் கட்சியை துவக்கி செயல்பட்டு வருகிறார் .
இவர் தற்போது மேலக்குடியிருப்பு கிராமத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் இரவு, திருமண விழா சென்று விட்டு திரும்பியபோது சுப.இளவரசனின் கார் மீது மர்ம நபர்கள் திடிரென துப்பாக்கியால் சுட்டும், வெடிகுண்டு வீசியும் கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஜெயங்கொண்டம் போலீஸாரிடம் சுப.இளவரசன் புகார் அளித்துள்ளார். அதில், திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு, கடந்த பிப்.11-ம் தேதி காரில் இரவு 7 மணியளவில் உடையார்பாளையத்திலிருந்து வீட்டுக்கு செல்லும்போது, துளாரங்குறிச்சி பைபாஸ் பிரிவு சாலையில் வந்தபோது அடையாளம் தெரியாத 15 பேர் கொண்ட கும்பல் எனது கார் மீது துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அவர்கள் கையில் வைத்திருந்த பெட்ரோல் குண்டை எங்களது காரில் மீது வீசி தாக்கினர். ஆனால் காரை நிறுத்தாமல் சென்றுவிட்டோம். எனவே துப்பாக்கியாலும் வெடிகுண்டாலும் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனக்கும் எனது குடும்பத்துக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று சுபாஇளவரசன் தனது புகார் மனு தெரிவித்திருந்தார். இது குறித்து அரியலூர் எஸ்.பி பெரோஸ்கான் அப்துல்லா மற்றும் டி.எஸ்.பி ஆகியோர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில்,தமிழர் நீதிக்கட்சித் தலைவர் சுபா.இளவரசனை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற வழக்கில் தேடப்பட்ட ஒருவர் கும்பகோணம் நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார்.கும்பகோணம் முதலாம் எண் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு, கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடி, கிழக்குத் தெருவைச் சேர்ந்த பஞ்சநாதன் மகன் எஸ்.பி.ரவிச்சந்திரன்(52) என்பவர் ஆஜராகி, தன்னை போலீஸார் தேடுவதாக அறிந்து நீதிமன்றத்தில் ஆஜராகியதாக கூறியுள்ளார். இதையடுத்து ரவிச்சந்திரனை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதனையறிந்த போலீசார் கும்பகோணம் நீதிமன்ற வளாகம் முன்பு குவிக்கப்பட்டனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.