தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோயில் பெருவுடையார் கோயில் தேரோட்டத்தில் சுமார் ஒரு லட்சம் பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்க இருப்பதால், அதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்தார். தஞ்சாவூரில் பெரிய கோயில் தேரோட்டம் நடைபெறவுள்ள வீதிகள், தேர் கட்டுமானம், பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்த பின்னர் மாவட்ட கலெக்டர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தஞ்சாவூரில் சிறப்பு மிக்க பெரிய கோயில் தேரோட்டம் வரும் மே 1 ம் தேதி காலை 6 மணிக்கு நடைபெறவுள்ளது. இதற்காக தேர் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் தற்போது ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேரோட்டம் நடைபெறும் நான்கு வீதிகளிலும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சில இடங்களில் சாலையில் பள்ளங்கள் உள்ளதை சரி செய்யவும், மழைநீர் வடிகால் கட்டமைப்பு பகுதிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. தேர் திருவிழாவில் பக்தர்களும், பொதுமக்களும் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கேற்ற வகையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. தேரோட்டத்துக்கு வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு கூடுதல் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது. அனைத்து அரசுத்துறை அதிகாரிகளை கொண்டு ஏற்கெனவே ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்படி அந்ததந்த துறைகள் சார்பில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் - கலெக்டர் தகவல்
என்.நாகராஜன் | 26 Apr 2023 01:06 PM (IST)
தஞ்சை பெரிய கோயில் தேரோட்டத்தில் ஒரு லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தகவல்
தேர் திருவிழா குறித்து கலெக்டர் ஆய்வு
Published at: 26 Apr 2023 01:06 PM (IST)