மயிலாடுதுறை மாவட்டம் வில்லியநல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் உத்திராபதி என்பவரின்  மனைவி 85 வயதான கோவிந்தம்மாள். இவருக்கு ஒரு மகனும், 2 மகளும் உள்ளனர். கணவர் மற்றும் இருந்த ஒரு மகனும் இறந்த நிலையில் 2 மகள்களையும் கும்பகோணம் அருகே திருமணம் செய்துகொடுத்துவிட்டு வில்லியநல்லூரில் தனது கணவர் வசித்து வந்த இடத்தில் குடிசைவீட்டில் தனியாக வசித்துவந்துள்ளார். 




இந்நிலையில், இவரது வீட்டை அருகில் இருக்கக்கூடிய சிலர் உனது இடத்தை வாங்கிவிட்டோம் நீ இங்கே இருக்கக்கூடாது என்று கூறி வெளியே அனுப்பியுள்ளனர். இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர் நாள் கூட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கோவிந்தம்மாள் மனு கொடுத்துள்ளார். இது குறித்து வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விசாரிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை செய்துள்ளார்.




ஆனால், அதிகாரிகள் கோவிந்தம்மாளுக்கு வயதானவர் என்பதால் சரியான தகவல்கள் கொடுக்காமல், இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் விட்டதாக செல்லப்படுகிறது.  இதனால் வாரந்தோறும் திங்கள் கிழமை நடக்கும் குறைத்தீர் நாள் கூட்டத்திற்கு வந்து கோவிந்தம்மாள் மனுகொடுத்திருக்கிறார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு வந்த கோவிந்தம்மாளிடம்  இது குறித்து விசாரித்து ஏபிபி செய்தி நிறுவனம்  செய்தி வெளியிட்டது.


உன் இடம் பறி போயிடுச்சு...’ 85 வயது மூதாட்டி வீட்டை அபகரித்த அநியாயம்... உதவி கேட்டு அலையும் அவலம்!




அதைத்தொடர்ந்து, தீவிர விசாரணை செய்த குத்தாலம் வட்டாட்சியர் மூதாட்டி வசிக்கும் இடம் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு என்றும், 50 ஆண்டுகளாக அந்த இடத்தில் மூதாட்டி வசித்து வந்தார் என்றும், கிராமத்தில் யாரும் மூதாட்டி கோவிந்தம்மாளை தொந்தரவு செய்யவில்லை என்றும் வயது முதிர்வு மற்றும் பயம் காரணமாக தனது வீட்டை ஆக்ரமிக்க உள்ளதாக புகார் அளித்து வந்ததும் தெரியவந்தது.  



இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவின்பேரில் மூதாட்டி வசித்து வந்த 1076 சதுரஅடி பரப்பளவில் உள்ள இடத்திற்கு பட்டா வழங்க உத்தரவிட்டார். இன்று கோவிந்தமாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து அவரது பெயரில் குடியிருப்பு மனை பட்டாவை மாவட்ட ஆட்சியர் வழங்கி அவரின் பயத்தை போக்கி அரசின் இடத்தை வழங்கியுள்ளதாகவும் உங்களை யாரும் வெளியேற்ற முடியாது என்றும், அரசு உங்களை பாதுகாக்கும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியது மூதாட்டியை நெகிழ்ச்சியடைய செய்தது. அனைவருக்கும் கோவிந்தம்மாள் நன்றி தெரிவித்தார்.