தமிழ்நாடு அரசு குடும்பஅட்டைதாரர்களுக்கு முழு கரும்பு, வெள்ளம், பச்சரிசி, முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், மஞ்சள் பையுடன் இருபது ஒர் பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை வழங்கிட உத்தரவிட்டு தமிழ்நாடு முழுவதும் வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பு தரமானதாக இல்லை எனவும், 20 பொருட்கள் வழங்காமல் பல இடங்களில் பொருட்களின் எண்ணிக்கை குறைத்து வழங்கப்படுவதாகவும் பல குற்றச்சாட்டுகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் எழுந்தது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்து இது தொடர்பாக ஒரு சில அதிகாரிகளையும் பணியிடை நீக்கம் செய்ய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது.




இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த சட்டநாதபுரத்தில் அரசு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கே சட்டநாதபுரம்,கீழ சட்டநாதபுரம்,செங்கமேடு, கம்பன் நகர் உள்ளிட்ட அப்பகுதிகளை சேர்ந்த சுமார்  600 க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளுக்கு ரேஷன் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அக்கடையில் தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பு பொங்கல் முடிந்து 10 நாட்களுக்கு மேலாகியும் இதுநாள் வரை வழங்கப்படவில்லை என்றும், பலருக்கு பொங்கல் பரிசு வழங்காமல் வழங்கப்பட்டு விட்டதாக செல்போனிற்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. 




மேலும் பொங்கல் பரிசு வழங்கப்பட்ட பல குடும்ப அட்டைதாரர்களுக்கும், அரசு வழங்கிய 21 பொருட்கள் வழங்காமல், பல பொருட்கள் குறைவாக வழங்கப்பட்டு, தராத பொருட்களை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து வேறொரு நாளில் வந்து பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் இதுநாள்வரை அந்தப் பொருட்களையும் தராமல் கடை ஊழியர் அளிப்பதாகவும், மேலும் தங்களுக்கு வழங்கக்கூடிய அரிசியும் தரமற்ற வழங்குவதாகவும், இதுகுறித்து கடை ஊழியரிடம் கேட்கும்பொழுது மரியாதை குறைவான வார்த்தைகளால் திட்டி அனுப்புவதாக இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறையினர் மற்றும் வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பொதுமக்களிடம் பேசி உரிய பொருட்கள் கிடைக்க வழிவகை செய்வதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.




இந்நிலையில் இது குறித்து கடந்த 28 ஆம் தேதி  ஏபிபி நாடு செய்தி தளத்தில் செய்தி வெளியிடப்பட்டு, நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது அதனை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணையில் அரசு பொங்கல் பரிசு தொகுப்பு முறையாக வழங்க தவறியது, வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பினை குறைவாக வழங்கியது, அன்றாட விற்பனை தொகையினை முறையாக செலுத்த தவறியது தெரியவந்ததை அடுத்து சட்டநாதபுரம் நியாயவிலைக் கடை ஊழியர் சக்கரவர்த்தியை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து செம்மங்குடி தொடக்க வேளாண்மை  கூட்டுறவு கடன் சங்க தலைவர் ராஜமாணிக்கம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.