டெல்டா பகுதியான திருவாரூர் மாவட்டத்தில் தற்போது குறுவை நெல் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்காத நிலையிலும் கடலோர பகுதிகளான தஞ்சை, நாகை திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் தற்போது பரவலாக நல்ல  மழை பெய்து வருகிறது. இந்த மழை சம்பா பயிர் விவசாயத்திற்கு உகந்ததாக இருந்த போதும் அறுவடை செய்த குறுவை நெல்லுக்கு பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 1.37 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி பணிகள் நடைபெற்று உள்ள நிலையில் 70 சதவிகிதம் அறுவடை பணிகள் முடிவடைந்துள்ளன மீதமுள்ள 30 சதவிகிதம் அறுவடை பணிகள் இன்னும் நடைபெறாத நிலையில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் நெல்மணிகள் பாதித்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.



திருவாரூர் மாவட்டத்தில் ஆங்காங்கே கடந்த  ஒரு வாரத்திற்கு மேலாக பெய்து வரும் மழையால் வயல்களில் நிரம்பிய மழைநீர் வடிய வழியின்றி தேங்கியுள்ளது. இதனால் அறுவடை எந்திரம் மூலம் நடைபெறும் அறுவடை பணிகள் மிகவும் மந்த நிலையில் நடைபெற்று வருகிறது. மழை நீர் தேங்கி நிலத்தில் ஈரப்பதம் அதிகமானதால் அறுவடை இயந்திரங்களை வயல்களில் இறக்க முடியாமல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. நெல் அறுவடை செய்ய ஒருமணி நேரத்திற்கு 2700 ரூபாய் முதல் 3000 ஆயிரம் ரூபாய் வரை வாடகை தொகை கொடுப்பதால் விவசாயிகளுக்கு செலவு அதிகமாவதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.



 

எனவே நெல் அறுவடை இயந்திரங்களை  வாடகைக்கு விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்த ஆண்டு குறுவை நெல் அதிகமாக விளைந்துள்ள நிலையில் நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், மேல வாசல் கிராமத்தில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் சுமார் 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேக்கமடைந்துள்ளது. இதேபோன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளது எனவே கொள்முதல் நிலையங்களுக்கு வரும் நெல்லை விரைவாக கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பெய்து வரும் மழையில் இருந்து நெல்லை பாதுகாக்க தார்பாய்கள் வழங்கி அரசு உதவிட வேண்டும் என கேட்டுகொண்டனர். கொள்முதல் நிலையங்களில் நெல் உலர்த்தவும், மழையில் நனையாமல் பாதுகாக்கவும் கூடுதலான உறுதியான சிமெண்ட் தளங்கள் அமைத்து தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.