தஞ்சாவூரிலிருந்து கும்பகோணத்திற்கு சென்ற அரசு பேருந்தில் ஒருவர் பெண் பயணியிடம் தகாத முறையில் நடந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அந்த பெண், நடத்துனரிடம் முறையிட்டார். இதுகுறித்து அந்த நபரிடம் கேட்டபோது அவர் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. பேருந்து கும்பகோணம் வரும் வரை மீண்டும் மீண்டும் அந்த நபர் அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடந்திருக்கிறார். ஆனால் மதுபோதையில் இருந்த அந்த நபரை கண்டிக்க முடியாமல் தவித்துள்ளார். அதனைப் பார்த்த மற்ற பயணிகள் அந்த நபரை சத்தம் போட்டனர்.
இதையடுத்து பேருந்தை நிறுத்தி அந்த நபரை கீழே இறங்குமாறு நடத்துனர் கூறினார். கீழே இறங்க மறுத்த அந்த நபர், தான் ஒரு காவல் துறை அதிகாரி. என்னை ஒன்றும் செய்ய முடியாது. ஒழுங்காக என்னை கும்பகோணம் பேருந்து நிலையத்தில் இறக்கிவிட வேண்டும் என கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர், கும்பகோணம் மேம்பாலம், நால்ரோடு, புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்லும் நான்கு வழிச் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தி இப்போது கீழே இறங்கவில்லை என்றால் பேருந்தை எடுக்க மாட்டோம் என கூறினார். பின்னர் பஸ்சில் இருந்த மற்ற பயணிகள் அந்த நபரை சத்தம்போட்டு கீழே இறக்கினர்.
அதோடு விடாமல் அந்த நபர், பேருந்து முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவேன் என்றார். போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியில் இந்த சம்பவம் நடந்ததால் நான்கு வழிச்சாலையில் நீண்ட தூரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் மற்றும் கும்பகோணம் மேற்கு போலீசார் மதுபோதையில் இருந்த அந்த நபரை இருசக்கர வாகனத்தில் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தியபோது அவர் தன்னுடைய கர்ச்சீப் கீழே விழுந்து விட்டது அதனை குனிந்து எடுக்கும் போது தெரியாமல் அந்த பெண் மீது கை பட்டுவிட்டது என போதையில் கூறினார்.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் அலுவலகத்தில் காவலராக பணியாற்றி வரும் தாஸ் என்பதுதெரியவந்தது. இதற்கிடையே அவர் மீது யாரும் புகார் அளிக்காததால் அவரை போலீசார் அனுப்பி வைத்துவிட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து காவல் துறையிடம் கேட்டபோது, “இதனை செய்தியாக பிரசுரிக்க போகிறீர்களா. அவர் யார் என்று தெரியவில்லை. எஸ்.பி. அலுவலகத்தில் எந்த பிரிவில் உள்ளார் என்று தெரியவில்லை. இது போன்ற தகவல்கள் எங்களுக்கு வரவில்லை” என அவரை காப்பாற்றும் விதமாக பதில் கூறினர்.
தஞ்சை மாவட்டத்தில் டிஐஜி மற்றும் எஸ்பி பெண்களாக இருக்கின்றார்கள். ஆனால் பாதுகாக்க வேண்டிய காவலரே, பேருந்தில் செல்லும் பெண்ணிடம், தகாத முறையில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்