தஞ்சை வடக்குவீதியில் அமைக்கப்பட்டு இருந்த எம்.ஜி.ஆரின் மார்பளவு சிலையை மர்மநபர்கள் பெயர்த்து கீழே தள்ளிவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை வடக்குவீதி பகுதியில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய அதிமுக எம்எல்ஏவும், தற்போது அமமுக மாநில பொருளாளருமான ரங்கசாமி இருந்த போது, மறைந்த முன்னாள்  முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டரை அடி உயரமுள்ள மார்பளவு அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.




இந்நிலையில், அப்பகுதி வழியே சென்றவர்கள் அந்த சிலை காணாமல் போய் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அருகில் சென்று பார்த்து போது, எம்ஜிஆரின் மார்பளவு சிலையை அடியோடு பெயர்த்து கீழே தள்ளி விட்டுள்ளது தெரிய வந்தது.   இது குறித்து, அப்பகுதி அதிமுகவினர்,  அதிமுக கரந்தை பகுதி செயலாளர் அறிவுடை நம்பி, கோட்டை பகுதி செயலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, 8வது வார்டு செயலாளர் சங்கர் மற்றும் ஏராளமான அதிமுகவினர் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இது குறித்து தஞ்சை மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர், பெயர்க்கப்பட்ட சிலை பீடத்தின் பின்புறம் கிடந்தது கண்டறிந்தனர். உடனடியாக அதே இடத்தில், எம்ஜிஆரின் அதே  சிலையை மீண்டும் இடத்தில் அதிமுகவினர் வைத்த, மாலை அணிவித்தனர்.




புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தார்.அப்போது நள்ளிரவு நேரத்தில் மர்மநபர்கள் இடித்து கீழே தள்ளியது தெரிய வந்தது. பின்னர் அருகிலுள்ள வணிக நிறுவனத்திலுள்ள சிசிடிவி கேமரா கண்காணித்தனர். அதில் நள்ளிரவு நேரத்தில் குடிமகன் ஒருவர் போதை தலைக்கேறி, எம்ஜிஆரின் சிலையில் கையை வைத்து தள்ளிக்கொண்டிருந்தது தெரிய வந்தது. இதனை அறிந்த போலீசார், சிசிடிவி கேமராவில் உள்ளவரை பற்றி, அப்பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், தஞ்சை,, வடக்கு வாசல், கல்லறை மேட்டுத்தெருவை சேர்ந்த சேகர் (எ) அந்தோனி (40) என்பது தெரிய வந்தது. பின்னர் அவரை தேடிய போது, வடக்கு வீதியில் குடிபோதையில் தள்ளாடிய படி நடந்து சென்று கொண்டிருந்தார்.




சேகரை கண்டறிந்த போலீசார், அவரை வாகனத்தில் ஏற்ற முயன்ற போது, தான் எந்த தவறும் செய்யவில்லை என போதையில் போலீஸ் வாகனத்தில் மறுத்து போலீசாரிடம் வாக்கு வாதம் செய்தார்.பின்னர், சேகரிடம், விசாரணைக்கு தான் செல்கின்றோம் என பேசி, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். எம்ஜிஆரின் சிலை இடித்து பெயர்க்கப்பட்ட சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.