சிறிய முயற்சிகளே பெரிய மாற்றங்களின் தொடக்கம் என்பதை மனதில் நிறுத்தி தான் சாதிக்க பிறந்த பெண். எத்தனை சோதனைகள் வந்தாலும் வெற்றிக்கனியை பறிக்காமல் விடமாட்டேன் என்ற மன உறுதியுடன் போட்டி களத்தில் எதிராளியை அசரடித்து பதக்கங்களை குவித்து வரும் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் உயரத்தை அடைய நம்பிக்கை அவசியம். அந்த நம்பிக்கை நம் மீதே இருப்பது அத்தியாவசியம் என்பதை உணர்ந்த 10ம் வகுப்பு மாணவி ஜே. சபரிஷா மற்றவர்களுக்கு முன் உதாரணமாக உள்ளார்.



தஞ்சை மேம்பாலம் செவித்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார் ஜே. சபரிஷா (15). தந்தை ஜெய்சங்கர், தாய் தனலட்சுமி. லால்குடி அருகே ஆலம்பாக்கத்தை சேர்ந்த இந்த மாணவிக்கு விளையாட்டு என்றால் உயிர். கத்தி என்று தெரிந்தாலும் துணிந்து கால் வை. போராட்டம் என்று தெரிந்தாலும் துணிந்து போராடு. காலம் உன் கை பிடியில். வெற்றி உன் காலடியில் என்பதை நிரூபித்து பதக்க வேட்டையாடி வருகிறார். உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் வாலிபால் குழு போட்டியில் என மொத்தம் 5 தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். ஓட்டப்பந்தயத்தில் இரண்டு வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

மயிலாடுதுறையில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையம் (14 வயதுக்கு உட்பட்டோர்) நடத்திய மாநில அளவிலான போட்டியில் குண்டு எறிதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்று அனைவரையும் தன் பக்கம் பார்க்க வைத்த சபரிஷா, உயரம் தாண்டுதலிலும் முதலிடம் பெற்று அசரடித்தார். இதிலும் தங்கப்பதக்கம் வென்றவர், 600 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 2ம் இடம் பிடித்து வெள்ளிப்பதக்கம் பெற்று கைத்தட்டல்களை அள்ளிக் கொண்டுள்ளார்.


 




இதேபோல் 2019ம் ஆண்டில் கேரளா கோழிக்கோட்டில் தேசிய அளவில் நடந்த போட்டிகளில் உயரம் தாண்டுதலில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை தனதாக்கி கொண்டார். மேலும் தஞ்சை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சத்யா ஸ்டேடியத்தில் 25.2.2020ல் நடத்திய விளையாட்டு போட்டிகளில் நீளம் தாண்டுதலில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். 28.4.2022ல் நடந்த விளையாட்டு போட்டிகளில் 200 மீட்டர் ஓட்டப்போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மாணவி இன்னும் பல போட்டிகளில் பங்கு பெற்று வெற்றிக்களை குவிக்க சரியான முறையில் பயிற்சி அளித்து வருகிறார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் முனைவர் முருகேசன். இந்த பயிற்சிகளால் பதக்கங்களை குவித்து தான் படிக்கும் பள்ளிக்கும், தன் ஆசிரியர்களுக்கும் பெருமைகளை தேடித் தருகிறார் மாணவி சபரிஷா. சாதிக்க இன்னும் வயது உள்ளது. பட்டியலில் பதக்கங்கள் எண்ணிக்கை உயரும். மாணவி சபரிஷா இன்னும் எங்கள் பள்ளிக்கு பெருமையை சேர்ப்பார் என்று அதிக நம்பிக்கை உள்ளது என தலைமை ஆசிரியர் சக்கரவர்த்தி பெருமிதத்துடன் தெரிவித்தார்.