தஞ்சாவூர்: தஞ்சை பெரிய கோயிலில் கடந்த 25-ஆம் தேதி தொடங்கிய ஆஷாட நவராத்திரி விழா நேற்று 5-ஆம் தேதி இரவு நிறைவடைந்தது. இதை ஒட்டி நடந்த நடன நிகழ்ச்சியில்தான் சிறுமி ஒருவர் நடன கலைஞர்கள் ஆட்டத்தை பார்த்து தானும் தாளம் தப்பாமல் ஆடி அனைவரையும் கவர்ந்தார்.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சையை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்து ஏராளமான வெற்றிகளை குவித்தவர் மாமன்னன் ராஜராஜ சோழன். உலகமே வியந்து பார்க்கும் அளவிற்கு கட்டிடக்கலையில் வானுயுர தமிழர்களின் பெருமைய உயர்த்தும் வகையில் பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனால் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்பு தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டது.
உலக பிரசித்தி பெற்றதும், கட்டிடக்கலைக்கு சான்றாய் விளங்கும் இக்கோயிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து சுவாமி தரிசனம் செய்து, கட்டிடக்கலையை பார்த்து வியந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா, நவராத்திரி விழா, சதய விழா, ஆஷாட நவராத்திரி விழா உள்ளிட்ட பல்வேறு விழாக்கள் விமரிசையாக நடைபெறுவது உண்டு. அதன்படி, இந்த ஆண்டுக்கான 23-வது ஆண்டு ஆஷாட நவராத்திரி விழா கடந்த 25ஆம் தேதி காலை தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் இந்த விழா நேற்று 5-ந் தேதி வரை நடந்தது.
மகா கணபதி ஹோமம்
தொடக்க விழாவை ஒட்டி கடந்த 25ம் தேதி காலை 8 மணிக்கு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. பின்னர், மஹா வாராஹி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராஹி அம்மனை வழிபட்டனர்.
தொடர்ந்து, மாலை ஆஷாட நவராத்திரி முதல் நாள் விசேஷ அலங்காரமான இனிப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, 2-ஆம் நாளில் மஞ்சள் அலங்காரமும், 27-ந்தேதி குங்கும அலங்காரமும், 28-ந்தேதி சந்தன அலங்காரமும், 29-ந் தேதி தேங்காய்ப்பூ அலங்காரமும், 30-ந்தேதி மாதுளை அலங்காரமும் அம்மனுக்கு நடந்தது.
முறையே ஜூலை 1-ந்தேதி நவதானிய அலங்காரத்திலும், 2-ந்தேதி வெண்ணெய் அலங்காரத்திலும், 3-ந் தேதி கனிவகை அலங்காரத்திலும், 4-ந் தேதி காய்கறி அலங்காரத்திலும் நேற்று 5-ந்தேதி புஷ்ப அலங்காரத்திலும் வாராஹி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 11 நாட்கள் நடக்கும் இந்த ஆஷாட நவராத்திரி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆஷாட நவராத்திரி இறுதி நாளை ஒட்டி பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் துபாய் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பங்கேற்ற நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சியை பார்ப்பதற்காக ஏராளமானோர் குவிந்து இருந்தனர். முதல் முறையாக உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கானவர்கள் முன்னிலையில் நாட்டியம் ஆடியது வாழ்நாள் மறக்க முடியாத அனுபவத்தை அளித்ததாக நடன கலைஞர்கள் தெரிவித்தனர்.
விழாவின் வி.வி.ஐ.பி.,
இந்த நிகழ்ச்சியை காண வந்திருந்த பார்வையாளர்களில் ஒரு தம்பதியின் 5 வயது சிறுமிதான் விழாவின் விவிஐபியாகவே மாறிவிட்டார். அட ஆமாங்க. பார்வையாளராக வந்த அந்த சிறுமி இசை ஒலிக்க தன்னை மறந்து மேடையில் ஏறி இசைக்கு ஏற்ப நடனம் ஆடினார் பாருங்க. பார்வையாளர்கள் பார்வை அனைத்தும் அந்த சிறுமியிடமே திரும்பியது. தாளம் தப்பாமல் தனது சின்ன பாதங்களால் ஜதிக்கு ஏற்ப தனக்கு தெரிந்த மூவ்மெண்ட்களை அநாயசமாக போட்டு ஆர்ப்பரிக்க வைத்து விட்டார். சில நேரங்களில் நடன கலைஞர்கள் ஆடுவதை பார்த்து அதே போல் ஆடியும் அசத்தினார்.
அந்த சின்னஞ்சிறு பாதங்கள் அருமையாக தாளம் பிடித்து ஆட கைகளோ நளினமாக சுழல பார்வையாளர்கள் பிரமித்துதான் போய்விட்டனர். நடனக்கலைஞர்களின் நடனத்தை பார்வையாளர்கள் எந்த அளவிற்கு ரசித்தார்களோ. அதைவிட சிறுமி ஆடிய நடனத்தை வெகுவாக ரசித்து பார்த்தனர்.