தஞ்சாவூர்: வார இறுதி நாட்கள் வந்து விட்டால் போது அனைத்து தொலைதூரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளிலும் பயணிகள் நெரிசல் அதிகளவில் காணப்படும். இதற்காகவே அரசு போக்குவரத்து கழகம் வார இறுதி நாட்களில் சிறப்பு பேருந்துகளை இயக்குகிறது. அந்த வகையில் இன்றுமுதல் 2 நாட்கள் 920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Continues below advertisement

வார இறுதி நாட்களையொட்டி சென்னையில் இருந்து வெளியூர்களுக்கும் மற்றும் பிற இடங்களில் இருந்தும் பயணிகள் பலர் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் என்ன சொல்லியிருக்காங்க தெரியுங்களா. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 340 பேருந்துகளும், நாளை 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

அதேபோல், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) 55 பேருந்துகளும்,, நாளை 55 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோவை ஆகிய இடங்களில் இருந்து திருவண்ணாமலை, நாகை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் உட்பட பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாதவரத்தில் இருந்து இன்று மற்றும் நாளை 20 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், வரும் ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்த வாரவிடுமுறையில் இன்று சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு 5 ஆயிரம் பயணிகளும், நாளை 4,982 பயணிகளும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை 5,041 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதேபோல் கடந்த தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 16, 17, 18 மற்றும் 19 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கப்படுகின்ற 2,092 பேருந்துகளுடன், 5,900 சிறப்பு பேருந்துகள் என நான்கு நாட்களும் சேர்த்து 14,268 பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 6,110 சிறப்பு பேருந்துகளும் ஆக ஒட்டு மொத்தமாக 20,378 பேருந்துகள் இயக்கப்பட்டன.

கலைஞர் நூற்றாண்டு அரசு பேருந்து முனையம் –கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள், திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.