1.திருவிடைமருதுார் மகாலிங்கசுவாமி கோயில் நந்தி




காவிரி தென்கரை தலங்களில் 30 வது கோயிலாகும். சோழர் காலத்தில் கட்டப்பட்டது. பஞ்ச குரோச தலங்களில் ஒன்று. இந்தியாவில் எங்கும் இல்லாத அளவில்  ஒரே இடத்தில் 27 நட்சத்திரங்களுக்கான  லிங்கங்கள் அமையப்பெற்றது.  மகாமேருடைய மூகாம்பிகையம்மன் தனிச்சிறப்பாகும்.  வரகுண பாண்டிய மன்னனுக்கு ஏற்பட்ட பிரம்ம ஹத்தி தோஷத்தை நிவர்த்தி செய்ததால், அவர் வழிபட்ட கோயிலும்.  மனநோய்க்கும் நிவர்த்தி செய்யும் தலமாகும். இக்கோயிலில் 7 பிரகாரம், 7 கோபுரம் கொண்டதாகும். காசி சமமான 6 கோயில்களில் ஒன்று. பாவை விளக்கு எனும் விளக்குடன் அணையா விளக்காக காட்சியளித்து வருகிறார். இங்குள்ள நந்தி சுமார் 13 அடி உயரத்தில் சுதையினால் செய்யப்பட்டதாகும். மிகவும் பிரமாண்டமாக இருப்பதால், ஏராளமான சுற்றுலாவாசிகள், பக்தர்கள் தரிசனம் செய்து செல்வார்கள். மேலும் இந்த நந்தியை வைத்து சூட்டிங் நடைபெற்றது.


2.தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் சப்தஸ்வர படிக்கட்டுகள்




கும்பகோணத்தை அடுத்த தாராசுரத்திலுள்ள ஐராவதீஸ்வர் கோயில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்டதாகும். இக்கோயிலில் சிற்பங்கள், சிலைகள் என அனைத்தும் வித்தியாசமாக இருப்பதால், இங்கு அடிக்கு 1008 சிற்பங்கள் என பெயர் பெற்றது. மேலும் வெளி நாடு, வெளி மாநில, மாவட்ட கலைகளை பற்றியும், கட்டிடங்களை பற்றியும் படிப்பவர்கள், இக்கோயிலில் பார்வையிட்டு குறிப்பெடுத்து சென்று வருகிறார்கள். இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயிலில் சுற்று புற வளாகத்தில் புல்தரைகளாக இருப்பதால், கும்பகோணம் பகுதியிலுள்ள கோயிலுக்கு வருபவர்கள், மாலை நேரங்களில் பொது மக்கள் ஒய்வெடுத்து செல்வது வழக்கம். இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் முன்பு பலி பீடத்தின் அருகில் உள்ள படிகள் இசையொலி எழுப்பும் படிகளாக அமைக்கப்பட்டுள்ளது. இப்படிக்கட்டுகளில் கற்களை கொண்டு தட்டினால் சரிகமபதநிஎன்ற சப்தங்களை கொடுக்கும். தற்போது படிக்கட்டுக்களை பொது மக்கள் தட்டி உடைத்து விடுவதால், இரும்பு கேட்களை கொண்டு மூடி வைத்துள்ளனர்.


3.பட்டீஸ்வரம் தேனுபுரிஸ்வரர் நந்தி விலகிய கோயில் மற்றும் காதல் மரம்




காமதேனுவின் புதல்வியருள், பட்டி பூசித்தது ஆதலால் இத்தலம் பட்டீச்சரம் என்னும் பெயர் பெற்றது. ஞானசம்பந்தர் வரும் காட்சியைக் காண இறைவன் நந்தியை விலகியிருக்குமாறு சொன்னதால், இங்குள்ள நந்திகள் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன.


இராமேஸ்வரத்தில் ராமர் ராமநாதரைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுத் திரும்பியபோது இங்கும் வில்முனையால் கோடி தீர்த்தம் உண்டாக்கி வழிபட்டதாக வரலாறு. ஞானசம்பந்தருக்கு இறைவன் முத்துப்பந்தல் அருளிய சிறப்புடைய தலம். இத்தலத்தில் ஐந்து நந்திகள் உள்ளன; அனைத்தும் சந்நிதியிலிருந்து விலகியே உள்ளன. விசுவாமித்திரர் பிரம்மரிஷி பட்டம் பெற்ற கோயிலாகும். இக்கோயிலில் உள்ள பிரசித்த பெற்ற துர்க்கையம்மன் சோழர் காலப் பிரதிஷ்டை செய்ததாக கல்வெட்டு உள்ளது. ஞானசம்பந்தர் முத்துப்பந்தல் திருக்காட்சி விமர்சையாக நடைபெறும். இத்தகைய சிறப்பு பெற்ற கோயிலின் தல விருட்சமாக வன்னி மரம் உள்ளது. ஞானவாவி குளத்தின் அருகில் இம்மரத்தில் காதலர்கள், தங்கள் காதலை நிறைவேறவும், பிரிந்து தம்பதியினர் ஒன்று சேரவும், இன்றளவும் மஞ்சள் மரத்தை சுற்றி கட்டி வருகின்றனர். செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும்.


4.திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில் கல பலகணி




கும்பகோணத்தை அடுத்த திருவலஞ்சுழி கபர்தீஸ்வரர் கோயில் சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் மிகவும் பழமையான,சுமார் 10 ஏக்கர் மேல் பரப்பளவில் கொண்டதாகும்.   ஆதிசேஷன் வெளிப்பட்டப் பள்ளத்தில் காவிரியாறு பாய்ந்து பாதாளத்தில் அழுந்தியது. இதனையறிந்த ஏரண்ட முனிவர் அப்பாதாளத்தில் இறங்க, காவிரி வெளிவந்து, வலமாய்ச் சுழித்துக்கொண்டு சென்ற காரணத்தால், திருவலஞ்சுழி என பெயர் பெற்றது. அமுதம் பெறுதற் பொருட்டுத் தேவர்கள் பாற்கடலைக் கடைந்தபொழுது நுரையினால் உள்ள வெள்ளைப் பிள்ளையாரை இந்திரன் இத்தலத்தில் எழுந்தருளுவித்து, வழிபட்டான் என்பது வரலாறு. மேலும் 6 அடி உயரத்தில் 4 அடி அகலத்தில் உள்ள கல்பலகணியில் நுட்பமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது சிறப்பாகும். திருவலஞ்சுழி கல்பலகணி, திருவீழிமழலை வௌவால்நத்தி மண்டபம், ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயில் கொடுங்கை போன்ற கட்டிடப்பணி தவிர்த்து பிற வகையிலான கட்டட அமைப்புகளை கட்டித்தருவதாக கட்டிடக்கலைஞர்கள் உறுதி கூறுவதாகக் இன்றளவும் கூறுவதுண்டு.  இதன் மூலமாக கட்டிடக்கலை நுட்பத்தை உணர முடியும். திருவலஞ்சுழி பலகணி (சன்னல்) மிகவும் நேர்த்தியாகவும் நுட்பமானதாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.


5.கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலுள்ள கல்நாதஸ்வரம்




கும்பகோணத்தின் பிரதானதும், முக்கியமான கோயிலான ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மூலவர் சுயம்பு மூர்த்தியாக காட்சியளிக்கின்றார். இங்குள்ள மங்களாம்பிகையம்மன் 72 ஆயிரம் கோடி மந்திரங்களை கொண்டு பிரதிஷ்டை செய்தாகும். பிரளயம் காலத்தில் 72 லட்சம் உயிரனுக்களை வைத்து, மண் பானையில் தண்ணீரில் மிதந்து வந்தது. அப்பானை தெரிந்த இடம் கும்பகோணம், அதனால் குடமூக்கு என்ற பெயரும் உண்டு. இக்கோயிலில் உள்ள கல்லினாலான நாதஸ்வரம் மிகவும் பிரசித்தபெற்றதாகும். விஷேச காலங்களில் மட்டும் வாசிக்கும் கல்நாதஸ்வரம் , கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயிலிலும், சென்னையிலுள்ள அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைத்துள்ளார்கள். சாதாரண மர நாதஸ்வரம் 600 கிராம் எடை கொண்டது. இது அதைவிட 6 மடங்கு (3600 கிலோ கிராம்) எடை கொண்டதாகவும், சுமார் இரண்டு அடி நீளத்துடனும் காட்சியளிக்கிறது. கல்நாதஸ்வரம் ஆதிகாலத்தில் இக்கருவியை கருங்கல்லில் செதுக்கி வாசித்திருக்கலாம் என்பது இசை ஆராய்ச்சியாளர்களின் கணிப்பாக இருக்கிறது.


6.கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி வைகுண்டதேர்




சாரங்கபாணி சுவாமி கோயில் தமிழ்நாட்டின் கும்பகோணம் நகரில் அமைந்துள்ளது. இது 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது. இக்கோயில் நாலாயிரத் திவ்ய பிரபந்தம் விளைந்த திருத்தலமாகக் கருதப்படும் பெருமையுடையது இது ஆழ்வார்களின் பாடல் பெற்ற தலம் ஆகும். கருவறையிலுள்ள தெய்வங்‌கள் அழகுற அமைக்கப்பட்டுள்ளன. இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை கொண்டுள்ளது. இதன் குதிரைகள், யானைகள் ஆகியவையும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இக் கல்தேர் ஒரு சிறந்த கலைப்படைப்பு. இக்கோவிலின் மற்றொரு சிறப்பு இங்குள்ள கோபுரத்தில் நாட்டிய சாஸ்திரத்தின் 108 கரண வகைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருப்பதாகும். கோமளவல்லி தாயார் எனும் மகாலெட்சுமி , கோயிலின் பின்புறமுள்ள ஹேமபுஷ்கரணி எனும் பொற்றாமரை குளத்தில் பிறந்தார். மகாலெட்சுமியை ஹேமரிஷி எனும் முனிவர் வளர்த்து வந்தார். பின்னர் பெருமாளை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என வேண்டிகொண்டார். பக்தனின் வேண்டுதலை நிறைவேற்ற பூலோகத்திலிருந்து தேருடன் கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயில் வந்தார். இதனால் சாரங்கபாணி சுவாமி கோயிலுக்கு பூலோக வைகுண்டம் என பெயர் வந்தது. இது போல் வேறு எந்த கோயிலும் கிடையாது என்பது தான் உண்மை.


7.தஞ்சாவூர் மாவட்ட எல்லையான அணைக்கரை




கும்பகோணம் சென்னை செல்லும் சாலையில் 185 ஆண்டுகள் பழமையான அணைக்கரையிலுள்ள கொள்ளிடம் பாலம் உள்ளது. பிரி்ட்டிஷ் பொறியாளர் சர்ஆர்தர்காட்டன் என்பவர் கடந்த 1836 ஆம் ஆண்டு மேலணையான  முக்கொம்பு அணையையும், கீழணையான கொள்ளிடம் ஆற்றின் அணைக்கரை அணையை 2 லட்சம் செலவில் கட்டியுள்ளார்.


அணக்கரையினால் தஞ்சை, அரியலுார், நாகை, கடலுார் உள்ளிட்ட மாவட்டங்கள் பயன்பெற்று, குடிநீர் ஆதாரமாக உள்ளது. இரண்டு ஆறுகளுக்குள் அணைக்கரை இருப்பதால், தீவுபோல் காட்சியளிக்கும். பொது ப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் இருப்பதால், கும்பகோணம் வருபவர்களும்,சென்னை செல்பவர்களும், அணைக்கரையில் சிறிது நேரம் ஒய்வெடுத்து விட்டு, சிறுவர்களுக்கான பூங்காவில் இளைப்பாரி செல்வார்கள்.  மேலும் அணைக்கரையில் சுமார் 50 க்கும் மேற்பட்ட முதலைகள் இருப்பதால், சுற்றுலாவாசிகள் நின்று ரசித்து செல்வார்கள்.  


8.சுவாமிமலை அப்பனுக்கு பாடம் சொன்ன இடம்




முருகனின் ஆறுபடைவீடுகளுல் நான்காம் படை வீடான சுவாமிமலை முருகன் சிறப்பு பெற்றதாகும். படைப்புத் தொழிலில் ஆணவம் முற்றியிருந்த பிரம்மன், முருகப்பெருமானை சந்திக்க நேர்ந்தது. அப்போது பிரம்மனிடம் படைப்புத் தொழில் செய்யும் உனக்கு ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியுமா? என்று முருகப் பெருமான் கேட்கிறார். இக்கேள்விக்கு பிரம்மனால் பதில் சொல்ல முடியவில்லை. பிரணவத்தின் பொருள் தெரியாமல் திகைத்தார். அவரைத் தலையில் குட்டிச் சிறையில் அடைத்தார் முருகன்.  ஈசனே நேரில் வந்து கேட்டுக் கொண்டதால், பிரம்மனை முருகன் விடுதலை செய்தார். பிறகு சிவபெருமான், பிரணவத்தின் பொருள் உனக்குத் தெரியுமா?" என்று முருகனிடம் கேட்டார். ஓ நன்றாகத் தெரியுமே என்றார் முருகன். அப்படியானால் அப்பொருளை எனக்குக் கூற இயலுமா?" என்றார் ஈசன். உரிய முறையில் கேட்டால் சொல்வேன் என்றார் முருகன். அதன்படி சிவபெருமான் இத்தலத்தில் சிஷ்ய பாவத்தில் அமர்ந்து, முருகனிடம் பிரணவ உபதேசம் கேட்டார். அன்று முதல், சுவாமியாகிய சிவபெருமானுக்கே முருகன் குருநாதனாக ஆனார். அதனால் முருகன், சுவாமிநாதன் என்றும், பரமகுரு என்றும், தகப்பன் சுவாமி என்றும் போற்றப்பட்டார்.