நாகையில் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.  தப்பி ஓடிய கடல் அட்டை வியாபாரிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

 

கடல் அட்டையை சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில், இலங்கை வழியாக வெளிநாடுகளுக்கு கோடிக் கணக்கான ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகள் தமிழக கடலோரப் பகுதியில் இருந்து கடத்தப்படுகின்றன. மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தியில் இருந்து கடல் அட்டைகள் உயிருடனும், பதப்படுத்தப்பட்ட நிலையிலும் இலங்கைக்கு சட்டவிரோதமாக கடத்தப்பட்டு வருகின்றன.

 

கடத்தல் காரர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்படும் பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகள் அனைத்தும் நீதிமன்ற வழிகாட்டுதல்படி அழிக்கப்படும். உயிருடன் பறிமுதல் செய்யப்படும் கடல் அட்டைகள் மீண்டும் கடலில் விடப்படும். கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு, பால் சுறா மற்றும் சங்கு வகைகள் உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2001 ஜுலை 11ம் தேதி தடை விதித்தது.

 



 

பின்னர், அதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அவற்றில் 23 கடல் பொருள்களுக்கான தடையை மத்திய அரசு நீக்கியது. கடல் அட்டைகளுக்கு சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் அமோக வரவேற்பு உள்ளது.

 

இதனை அவர்கள் மருந்தாவும், உணவுப் பொருளாகவும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் ஒரு சில தமிழக மீனவர்கள் மற்றும் வியாபாரிகள் கடல் அட்டைகளைச் சேகரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தனர். இந்த நிலையில் நாகை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை வியாபாரிகள் வாங்கி வீட்டில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு கடத்தி வருவதாக தொடர் புகார்கள் வந்தன.

 

இதையடுத்து நாகை க்யூ பிரிவு போலீசார் கீரைகொல்லை தெரு பகுதியில் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டிருந்த நிலையில் அந்த வீட்டில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 600 கிலோ கடல் அட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.  இதையடுத்து க்யூ பிரிவு போலீசார் வீட்டில் பேரலில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடல் அட்டைகளை பறிமுதல் செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கடல் அட்டைகள் நாகையில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்திச் சென்று அங்கிருந்து இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படுவதாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய கடல் அட்டை வியாபாரிகள் போலீசார் வருவதை அறிந்து அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.