தஞ்சாவூர் அருகே மாரியம்மன்கோவில்-கும்பகோணம் பைபாஸ் கடகடப்பை பகுதியில் அதிகாலை 2 மணியளவில் சாலையின் சென்டர் மீடியனில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்த மூன்று வாலிபர்கள் மீது கும்பகோணம் சென்ற லாரி மோதியதில் பரிதாபமாக இறந்தனர். தஞ்சை அருகே நாட்டாணியை சேர்ந்தவர் பிரசாத் (41). காண்டிராக்ட் வேலை செய்து வந்தார். மாரியம்மன் கோவில் மருங்கை கிராமத்தை சேர்ந்த சுதாகர் (27), அசூரமங்கலத்தை சேர்ந்த சந்திரசேகர் (32). இவர்கள் மூவரும் நெருங்கிய நண்பர்கள்.

  அதிகாலை பிரசாத், சுதாகர் ஆகியோர் காரிலும், பைக்கில் சந்திரசேகரும் தஞ்சை அடுத்த கடகடப்பை பகுதியில் புதிதாக போடப்பட்டு வரும் கும்பகோணம் பைபாஸ் சாலைக்கு சென்றனர்.




இவர்கள் மூன்று பேரும், ரிலாக்ஸ ஆன நாட்களில் ஆள் நடமாட்டம் இல்லாத புதிய பைபாஸ் சாலையில் அமர்ந்து பேசிக்கொண்டிருப்பது வழக்கம். இதே போல் மூன்று பேரும் அங்கு பைபாஸ் சாலையோரம் கார், மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்டர் மீடியனில் 3 பேரும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தஞ்சையில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற லாரி  கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகிய 3 பேர் மீதும் மோதியது. மேலும் நிறுத்தப்பட்டிருந்த கார், பைக் மீதும் மோதியது.  


இந்த கோர விபத்தில் பிரசாத், சுதாகர், சந்திரசேகர் ஆகியோர் உடல்நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். கார், மோட்டார் சைக்கிள் பலத்த சேதமடைந்தது. விபத்தை ஏற்படுத்திய டிரைவர்,  லாரியை சாலையிலேயே நிறுத்திவிட்டு விட்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்த தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று விபத்தில் இறந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலை பணி பெரும்பாலான பகுதிகளில் முடிந்து விட்டதால், சாலையில் வாகனஙகள் வராது என்பதற்காக சாலை மற்றும் சென்டர் மீடியனில் பேசி கொண்டிருக்கின்றார்கள். சிலர் மது அருந்துகின்றார்கள். போலீசார் வாகன ரோந்து சென்று, இரவு நேரங்களில் நிற்பவர்களை அறிவுரை கூறி அனுப்பி வைக்க வேண்டும்.  புதியதாக போடப்பட்டு வரும் தஞ்சாவூர்-விக்கரவாண்டி பைபாஸ் சாலையில் முதன் பலியாக மூன்று பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வளையபேட்டையைச் சேர்ந்தவர் ரமேஷ் (36) டாட்டா ஏசி டிரைவர். இவர் சுந்தரபெருமாள் கோயில்  பைபாஸ் சாலையில் வந்து கொண்டிருந்த போது, கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் நோக்கிச் சென்ற டூரிஸ்டர் வேன், டாட்டா ஏசி வாகனம் மீது மோதியது. இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.  டூரிஸ்டர் வேனில் வந்த கும்பகோணம் செம்போடையை சேர்ந்த மணிகண்டன் (40), காயமடைந்து கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தப்பி ஓடிய டூரிஸ்ட் வேன் டிரைவரை சுவாமிமலை போலீசார் தேடி வருகின்றனர். தஞ்சாவூர் பகுதியில் இரு வேறு சாலை விபத்துக்களில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.