கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் செயல்படாத நிலையில் தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி, நாளை முதல் பள்ளிகளில் 9,10,11,12 ஆம் வகுப்புகள் சுழற்சி முறையில் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின் பற்ற வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பள்ளி திறப்பின்போது பள்ளி வளாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு, வகுப்பறை மற்றும் கதவு, சன்னல், கைப்பிடிகள் போன்றவற்றில் போதியளவு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, மாணவர்களும், ஆசிரியர்களும் பள்ளி வளாகத்தில் போதுமான சமூக இடைவெளியை பின்பற்றுதலை தலைமை ஆசிரியர் உறுதி செய்திடவேண்டும்.
பள்ளியில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயும், வெளியேயும் அனைவரும் முககவசம் அணிவதை உறுதிபடுத்தவும், போதியளவு கிருமி நாசினி கொண்டு கைகழுவுவதற்கான வசதிகள் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும், பள்ளியில் உடல்வெப்ப பரிசோதனைக் கருவிகள், கிருமிநாசினிகள், சோப்புகள், பல்ஸ் ஆக்ஸி மீட்டர் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். மேலும் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் 100 சதவிகிதம் கட்டாயம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதை உறுதிபடுத்திடவும், ஊசி போடுவதற்கு அறிவுரைகள் வழங்க வேண்டும். மேலும், பள்ளியில் மாணவர்கள் உடல் நலனில் ஏதேனும் சுணக்கம் ஏற்பட்டால், உடனே அருகிலுள்ள மருத்துவமனைக்கோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தகவல் தெரிவித்து பரிசோதனை மேற்கொள்ள தலைமையாசிரியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களுக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ ஏதேனும் கொரோனா அறிகுறி தெரிந்தால் பெற்றோர்கள், மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் உடன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மாணவர்களை மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்ல அனுமதிக்கக்கூடாது. இதனை மாணவர்களின் பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். இத்தகைய கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் பள்ளி திறப்பிற்கு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து தஞ்சை மாவட்டம் முழுவதும் நாளை முதல் 440 பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. மாணவர்களின் நலன் கருதி கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டையிலுள்ள கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், சுத்தம்செய்யும் பணிநடைபெற்றது. மேலும் வளாகங்கள் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டும், ஒட்டடைகள் அடிக்கப்பட்டது. மாணவர்கள் அமரும் இடம், மேஜைகள், நாற்காலிகள், அவர்கள் சென்று வராண்டா, கழிப்பறை, மைதானம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் கிருமி நாசினி அடிக்கப்பட்டு, தூய்மைப்படுத்தப்பட்டது.
மேலும், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களிடம், மாணவர்களை எப்படி சமூக இடைவெளி விட்டு அமர வைப்பதும், முககவசம் அணிந்துள்ளார்களா என பார்ப்பது, மாணவர்களின் யாரேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களது பெற்றோர்களுக்கு உடனடியாக தகவல் கொடுத்து விட்டு, அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பது, வகுப்பறைக்குள் வரும் போது உடல்வெப்ப பரிசோதனைக் கருவியை கொண்டு சோதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் தொடர்பு கொண்ட போது, தஞ்சை மாவட்டத்தில் 440 பள்ளிகள் திறந்து செயல்படவுள்ளன. மாணவ, மாணவிகள் வருகை குறித்து நாளை மாலை தான் தெரிய வரும் என தெரிவித்துள்ளனர்.