இந்தியாவிலேயே முதல்முறையாக 32 அடி உயரமுள்ள அத்தி விநாயகர் ஊர்வலம் நாகையில் நடைபெற்றது. தப்பட்டம், மயிலாட்டம், கதகளி, காளி நடனம் என நாகையில் விநாயகர் சதுர்த்தி விழா களைக்கட்டியது.

 

 

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாகையில் ஒவ்வொரு ஆண்டும் 32 அடியில் அட்டையினால் செய்யப்பட்ட விநாயகர் ஊர்வலம் நடைபெறுவது வழக்கம். 35 ஆண்டுகள் நிறைவு பெற்றதை அடுத்து இந்த ஆண்டு விஷ்வ ரூப விநாயகர் குழு சார்பாக 32 அடியில் இந்தியாவிலேயே முதல்முறையாக அத்தி மரத்தில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருச்சியில் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் 12 டன் எடையில் பிரத்யேகமாக செய்யப்பட்ட வாகனத்தில் , 3200 கன அடி அத்தி மரத்தில் 4 டன் எடையில் செய்யப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டார். நாகை நீலாய தாட்சி அம்மன் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட அத்தி விநாயகர் ஊர்வலத்தில் பங்கேற்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.

 



 

 

விநாயகர் ஊர்வலத்தில் மங்கள வாத்தியங்கள், தப்பாட்டம், மயிலாட்டம், காளியாட்டம், செண்டை மேளம், கேரளத்து கதகளி, பேண்டு வாத்தியங்கள் என கண்கவர் கலை நிகழ்ச்சிகள் அங்கிருந்தவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாகையில் இருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக விடியற்காலை நாகூர் வந்தடைந்ததை அடுத்து, நாகூர் வெட்டாறில் பிரதிஷ்டை செய்யப்பட்ட களிமண் விநாயகர் கரைக்கப்பட உள்ளது. 32 அடி அத்தி விநாயகர் மற்றும் நாகை மாவட்டத்தில் 290 விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதால் எஸ்பி ஜவஹர் தலைமையில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் இரவு பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

 



 

 


நாகை மாவட்டத்தில் கனமழை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் அறிவிப்பு

 



 

 

வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் முழுவதும் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வந்தது. மாலையில் இருந்து மழை விட்டிருந்த நிலையில் இன்று காலை முதல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. நாகை, நாகூர், வேளாங்கண்ணி, திட்டச்சேரி, திருமருகல், கீழ்வேளூர், கீவலூர், மேலப்பிடாகை, திருக்குவளை, காக்காளனி, விழுந்தமாவடி பிரதாம ராமபுரம், செருதூர், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி நாகை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் உத்தரவிட்டுள்ளார். கனமழை மற்றும் விஸ்வரூப விநாயகர் குழு சார்பாக 32 அடி அத்தி மரத்திலான விநாயகர் நகர்வலம் நாகையிலிருந்து நாகூர் வரை சென்றது இதன் காரணமாக நாகை மற்றும் நாகூர் பகுதிகளில் மின் நிறுத்தம் செய்துள்ளதால் விடுமுறை குறித்து மாணவர்கள் அறியாத நிலை ஏற்பட்டதால் மழையில் நனைந்தபடியே மாணவர்கள் பள்ளி, கல்லூரிக்கு வந்து மீண்டும் நனைந்தபடியே செல்கின்றனர்.