காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 14 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா மற்றும் தாளடி பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 3 இலட்சத்து 75 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு போதிய அளவு ஆறுகளில் தண்ணீர் இருந்த காரணத்தினாலும், சரியான நேரத்தில் மழை பெய்த காரணத்தினாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் சம்பா சாகுபடி பணிகளை தொடங்கி ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் நெல் பயிர்கள் பயிரிட்டு 50 நாட்கள் ஆன நிலையில் தொடர்ந்து வடகிழக்கு பருவமழை டெல்டா மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக சம்பா மற்றும் தாளடி நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் மழை நீரை வடிய வைக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.


இந்த நிலையில் தமிழக முதல்வர் உத்தரவின் அடிப்படையில் அமைச்சர்கள் தலைமையில் குழு அமைத்து பாதிக்கப்பட்ட நெல் பயிர்களை டெல்டா மாவட்டங்களில் ஆய்வு செய்ய உத்தரவிட்டு இருந்தார். மேலும் தமிழக முதல்வர் நேரடியாக திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பயிர்களை நேரடியாகச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் விவசாயிகளுக்கு பாதிக்கப்பட்ட நெல் பயிருக்கு ஒரு ஹெக்டேருக்கு 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் அறிவித்திருந்தார். இந்த நிவாரணம் போதாது எனவும் ஒரு ஏக்கருக்கு 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் மேலும் உரம் உள்ளிட்ட இடு பொருள்கள் முழு மானியத்தில் வழங்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் மழை விட்ட பின்னர் விளைநிலத்தில் தேங்கியிருந்த மழை நீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.




மேலும் பயிர்களுக்கு உரம் அடித்து பயிர்களை வளர்த்து வந்த நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இரண்டு தினங்களாக திருவாரூர் மாவட்டத்தில் இடைவிடாது பெய்த கனமழையின் காரணமாக பால் கட்டும் பருவத்தில் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் மழைநீரில் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் வேதனை அடைந்துள்ளனர். ஏற்கனவே ஒரு ஏக்கருக்கு 20 ஆயிரத்திற்கும் மேல் செலவு செய்து பாதிக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் மழைநீரில் பாதிக்கப்பட்டுள்ளதால் செய்த செலவினை எடுக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் கிராமப்புறங்களில் உள்ள சிறு குறு வாய்க்கால்கள் முழுமையாக தூர் வாராததே என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண்துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பயிர்களைக் கணக்கெடுத்து அரசுக்கு அனுப்பி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.




விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை கொண்ட 540 குழுக்கள் ஆட்சியரின் உத்தரவின் பேரில் உருவாக்கப்பட்டு பயிர் பாதித்த பகுதிகளில் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. கணக்கெடுப்பின் நிறைவாக வட்ட வாரியாக நடத்தப்பட்ட ஆய்வில் திருவாரூரில் 1815 ஏக்கரும், திருத்துறைப்பூண்டியில் 377 ஏக்கரும், முத்துப்பேட்டையில் 17,125 ஏக்கரும், மன்னார்குடியில் 1575 ஏக்கரும், கோட்டூர் வட்டத்தில் 4877 ஏக்கரும், நன்னிலம் வட்டத்தில் 700 ஏக்கரும், நீடாமங்கலத்தில் 1805 ஏக்கரும், குடவாசல் வட்டத்தில் 1162 ஏக்கரும், கொரடாச்சேரி பகுதியில் 1312 ஏக்கரும், வலங்கைமான் பகுதியில் 275 ஏக்கரும் என அறுவடைக்கு தயாராக இருந்த 31,625 ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இரண்டு நாட்கள் பெய்த கன மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசுக்கு சமர்ப்பித்து விரைந்து அரசிடமிருந்து உரிய நிவாரண தொகை அல்லது இழப்பீட்டு தொகையை மாவட்ட நிர்வாகம் பெற்றுத் தர வேண்டும் என திருவாரூர் மாவட்ட விவசாயிகள் காத்திருக்கின்றனர்.