தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்திலுள்ள அரசு அலுவலக மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள், புரோக்கர்கள், வாகன தொடர்பாக வருபவர்களிடம், அன்பளிப்பு வாங்கி வருவதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், தஞ்சாவூரில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார், மதியம் 2 மணிக்கு திடிரென அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அலுவலகத்தில் உள்ளே மூன்று இடங்களில் சோதனையிட்ட போது, அலுவலகத்தின் வெளியில் துாக்கி வீசப்பட்டு கீழே கிடந்த 30 ஆயிரத்தை கைப்பற்றினர். அப்போது, அலுவலகத்திற்கு தொடர்பில்லாமல் நின்றிருந்த இரண்டு புரோக்கர்களிடமும், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
அத்துடன் அலுவலக ஊழியர்களிடமும் தனித்தனியாக விசாரித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், டிராவல்ஸ், டிரைவிங் பள்ளி போன்ற பல்வேறு உரிமையாளர்கள் அதிகாரிகளுக்குப் பணம் கொடுப்பதாக கிடைத்த பேரில், அதிரடியாகச் சோதனை நடத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், தஞ்சாவூரில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள், தற்போது லஞ்ச ஒழிப்பு போலீசாரின் கெடுபிடிகள் அதிகமாக இருப்பதால், அலுவலகத்தின் எதிரிலுள்ள சேவை மையத்தில் தனது, வாடிக்கையை தொடர்கின்றனர்.
லைசன்ஸ் உள்ளிட்ட பல்வேறு காரணத்திற்காக வரும் பொதுமக்களிடம், அலுவலகத்திலுள்ள ஒருவர், நீங்கள் கேட்கும், விண்ணப்பம் இல்லை. எதிரிலுள்ள குறிப்பிட்ட கடையில், எனது பெயரை சொல்லி சென்று வாங்கி கொள்ளுங்கள் என்று கூறுகின்றனர். அங்கு சென்றால், நீங்கள் கேட்கும் விண்ணப்பம் இங்கு இல்லை, தேவை என்றால், சில நாட்கள் ஆகும் என்று கோபத்துடன் பேசுகின்றனர். பின்னர் விண்ணப்பம் வாங்க சென்றவர், அலுவலகத்தில் உள்ளவரின் பெயரை கூறியவுடன், விண்ணப்பத்திற்கு 1500 தாருங்கள். எந்தவிதமான தயக்கமில்லாமல் கேட்கின்றார்கள்.
குறைந்த விலையிலுள்ள விண்ணப்பத்தை அதிக விலைக்கு விற்பனை செய்கின்றீர்களே என்று கேட்டால், நாங்கள், வட்டார போக்குவரத்து அலுவலர். ஆய்வாளர், எழுத்தர் உள்ளிட்ட அனைவருக்கும் கொடுத்தது போக மீதமுள்ள சொற்ப பணத்தை தான் கிடைக்கும். இப்படி எல்லாம் நாங்கள் வாங்கி கொடுக்காவிட்டால், நாங்கள் இங்கு பொழப்பு நடத்த முடியாது என்று மரியாதை குறைவாக பேசி, பணத்தை பெற்று கொள்ளுகின்றனர்.
அதன் பிறகு பணத்தை குறைவாக கொடுத்தால், 20 நாட்களும், கேட்கும் தொகை கொடத்தால், உடனே, அவர்கள் கேட்பது நடைபெற்று வருகிறது. இது போன்ற நடைபெறுவது அனைத்து பொது மக்களுக்கும் அரசு அலுவலர்களுக்கும், புரோக்கர்களுக்கும் தெரிந்து நடைபெறுவது என்பது வேதனையான விஷயமாகும். லஞ்ச ஒழிப்பு போலீசார், பாதிக்கப்பட்டவர்கள், தகவல் அளித்ததின் பேரில் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுப்பார்கள். ஆனால் இது போன்ற ஆய்வு மிகவும் வேடிக்கையாக இருக்கின்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கண்துடைப்பிற்காக நடத்தப்படும் சோதனையாகும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.