தஞ்சாவூர்: கடந்த ஏழு மாதங்களில் 'ரேபிஸ்' நோயால் 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாய்க்கடி தடுப்பூசி போட்டாலும் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. 

ரேபிஸ் நோய் என்பது ஒரு கொடிய வைரஸ் நோயாகும், இது பாதிக்கப்பட்ட விலங்குகளின் உமிழ்நீர் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. குறிப்பாக, நாய், பூனை, வெளவால் போன்ற விலங்குகள் கடித்தால் இந்த நோய் பரவ வாய்ப்புள்ளது. ரேபிஸ் நோயின் அறிகுறிகள் தென்படும்போது, அது பெரும்பாலும் சிகிச்சை அளிக்க மிகவும் தாமதமாகிவிடும், எனவே கடித்தவுடன் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம். 

ரேபிஸ் நோய், பாதிக்கப்பட்ட விலங்கின் உமிழ்நீர் மனித உடலுடன் தொடர்பு கொள்ளும்போது பரவுகிறது. குறிப்பாக, காயம் அல்லது கீறல் உள்ள இடங்களில் கடித்தால் அல்லது நக்கியதால் நோய் பரவும் அபாயம் அதிகம். காய்ச்சல், தலைவலி, குமட்டல், வாந்தி, குழப்பம், மற்றும் நரம்பு மண்டலப் பாதிப்பு போன்றவை ரேபிஸ் நோயின் அறிகுறிகளாகும். சில சமயங்களில், பயம், பதட்டம் மற்றும் நீர் அருந்துவதில் சிரமம் போன்றவையும் ஏற்படலாம்.

ரேபிஸ் நோய்க்கான தடுப்பூசி, கடித்த உடனேயே போடப்பட வேண்டும். கடித்த சில நாட்களுக்குள் தடுப்பூசி போடப்படாவிட்டால், நோய் பரவும் வாய்ப்பு அதிகம். ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்து விலகி இருப்பது அவசியம். குறிப்பாக, தெருநாய்கள் மற்றும் பிற விலங்குகளிடமிருந்து விலகி இருக்க வேண்டும். ரேபிஸ் நோய் ஒரு தீவிரமான நோய் மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் உயிருக்கு ஆபத்தானது.

தமிழகத்தில் கடந்த ஏழு மாதங்களில் நாய்க்கடியால், 3.67 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், 'ரேபிஸ்' நோயால், 20 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் நாய்க்கடிக்கான தடுப்பூசி போட்டிருந்தாலும், தொடர் சிகிச்சை அவசியம் என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளதால் மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்..

தெரு நாய்கள், வளர்ப்பு பிராணிகள் கடித்து, மனிதர்கள் காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இவற்றால் ஏற்படக்கூடிய, 'ரேபிஸ்' தொற்றில் இருந்து, செல்லப் பிராணிகளையும், மனிதர்களையும் காக்க தடுப்பூசி மட்டும் ஒரே தீர்வாக உள்ளது. இருப்பினும் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும், தொற்று ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக நடக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதற்கு தொற்று வாய்ப்புக்கு பிந்தைய சிகிச்சை நடைமுறைகளை, சரிவர பின்பற்றாமல் இருப்பதுதான் முக்கிய காரணமாக அமைகிறது. இந்த ஆண்டில் இதுவரை 3.67 லட்சம் பேர் வரை நாய்க்கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 20 பேர் ரேபிஸ் தொற்று பாதித்து உயிரிழந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் ரேபிஸ் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 4.80 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 40 பேர் ரேபிஸ் நோயால் உயிரிழந்தனர்.

இதுகுறித்து, பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், நாய்க்கடி காயங்களை முறையாக கிருமி நாசினி வைத்து துாய்மைப்படுத்தாமல் இருந்தால், தொற்று ஏற்படக்கூடும். தடுப்பூசிகளை தவற விட்டாலோ, உரிய நேரத்தில் செலுத்தாமல் இருந்தாலோ, 'ரேபிஸ்' நோய் பரவுவதை தடுக்க முடியாது. ஆழமான காயங்களுக்கு, 'ரேபிஸ் இம்யூனோ குளோபுலின்' எனப்படும், விரைவு எதிர்ப்பாற்றல் மருந்துகளை வழங்காமல் இருப்பதும், ரேபிஸ் வருவதற்கு வாய்ப்பாக அமைகிறது. காயங்களின் அளவு மற்றும் ஆழத்தை மதிப்பிட்டு, சிகிச்சை பெற வேண்டும்.

மேலும், முதல் நாள், மூன்றாம் நாள், ஏழாம் நாள், 21வது நாள் என, நான்கு தவணைகளாக தடுப்பூசி செலுத்துவது கட்டாயம். இது போன்ற தொடர் சிகிச்சைகளை தவற விடுவோருக்கு, ரேபிஸ் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு தொற்று ஏற்பட்டால், உயிரிழப்பு நிச்சயமாக உள்ளது. எனவே, நாய், பூனை உள்ளிட்ட விலங்குகள் கடித்தால், அலட்சியம் காட்டாமல் சிகிச்சை பெற்றால், ரேபிஸ் பாதிப்பை தவிர்க்கலாம் என்றனர்.