திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது.1000 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து பல்வேறு பணிகளை மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படுத்தி வருகின்றனர். இந்த மத்திய பல்கலைக்கழகத்தில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா கேரளா கர்நாடகா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பேராசிரியர்களும் கல்விக்காக பல்கலைக்கழகத்திற்கு வந்து செல்கின்றனர். மேலும் பல்கலைக்கழக வளாகத்திற்கு உள்ளேயே மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதிகளும் உள்ளன. மத்திய பல்கலை கழகத்திற்குள் நுழைவதற்கு தனி அனுமதி பெற வேண்டிய சூழ்நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் நீலக்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் ஆற்றங்கரைகளில் இருந்த அரசுக்கு சொந்தமான தேக்கு மரங்களை வெட்டி மத்திய பல்கலைக்கழக துணை பதிவாளர் உதவியுடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் மறைத்து வைத்து விற்பனை செய்து வந்தார். இச்சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு புகார் வரவே காவல்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தேக்கு மர கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நீலக்குடி பகுதியைச் சேர்ந்த அதிமுக பிரமுகர் மற்றும் பல்கலைக்கழக துணைப்பதிவாளர் ஆகியோர் மீது சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.




அதன்பின்பு மத்திய பல்கலைக்கழகத்தில் வெளிநபர்கள் யாரும் நுழையாத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன மாணவர்களும் பேராசிரியர்களும் உரிய அடையாள அட்டை இருந்தால் மட்டுமே பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டு வந்தனர். வெளி நபர்கள் யாரேனும் பல்கலை கழகத்திற்குள் செல்ல வேண்டுமென்றால் பல்கலைக்கழக நிர்வாகிகளிடம் அனுமதி பெற வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இரண்டு லட்சம் மதிப்புள்ள நீர் ஏற்றும் மின்மோட்டார் திருடப்பட்டிருப்பது இன்று காலை பல்கலைக்கழக ஊழியர்கள் வந்து பார்த்தபோது தெரியவந்துள்ளது.


தகவல் அறிந்த மத்திய பல்கலைக்கழக நிர்வாக குழுவினர் நன்னிலம் காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் காவல்துறையினர் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாதுகாப்பு கெடுபிடியாக உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மின் மோட்டார் திருட்டு போயுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பல்கலைக்கழக ஊழியர்களின் உதவி இல்லாமல் இந்த திருட்டு சம்பவம் நடைபெற வாய்ப்பில்லை என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.