திருவாரூர், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் புதுவை போன்ற இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. குமரி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு இப்பகுதிகளுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளார்கள் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று காலை முதல் டெல்டா மாவட்டங்களான திருவாரூர் தஞ்சாவூர் நாகப்பட்டினம் மேலும் திருச்செந்தூர் நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று இரவு முதல் திருவாரூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக திருவாரூரில் 10.3 சென்டிமீட்டர் கனமழையும் நன்னிலத்தில் 9.4 சென்டிமீட்டர் கன மழையும் அதிக மழை அளவாக பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் இன்றும் திருவாரூர் மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு திருவாரூர் பகுதியில் பத்து சென்டிமீட்டர் தொடர் கனமழையால் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பேருந்துகள் மழைநீர் மற்றும் கழிவு நீரில் மிதந்து வருகின்றன. பொது மக்கள் கடுமையான அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதேபோல திருவாரூர் விஜயபுரம் சாலை மற்றும் பைபாஸ் சாலையை இணைக்கும் ரயில்வே கீழ் பாலம் முழுவதும் மழை நீரும் கழிவு நீரும் நிரம்பி இருக்கிறது. இதனால் பொதுமக்கள் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவாரூர் நகர பகுதிக்குள் எளிதாக வர வேண்டிய பொதுமக்கள் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கீழ் பாலத்தின் மேலே அரசு மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. அங்கு செல்லக்கூடிய சாலையிலும் முழுவதுமாக மழை நீரும், கழிவு நீரும் நிரம்பி வழிவதால் கர்ப்பிணிகளும் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.
இதேபோல குடியிருப்பு பகுதிகளான வண்டிக்காரத் தெருவில் அமைந்துள்ள ராணுவ நகர்ப்பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளது இதனால் அந்த பகுதி மக்கள் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படும் என்ற அச்சத்தில் உள்ளனர். அதன் தொடர்ச்சியாக குழுந்தான் குளத்தெருவில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் குழந்தைகளை வைத்துக்கொண்டு பெற்றோர்கள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். தகவலறிந்து வந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் வீடுகளுக்குள் புகுந்துள்ள மழைநீரை அகற்றுவது தொடர்பாக ஆய்வு செய்தார். அதன் பின்னர் நகராட்சி அதிகாரிகளுக்கு உடனடியாக மழைநீரை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக மழையால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு மதிய உணவுகளை வழங்கினார்.