திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கனமழை காரணமாக மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை  மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்பாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை செயலாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அவர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. தொடர்ந்து திருவாரூர் வட்டம் பழவனக்குடி கிராமத்தில் உள்ள நிவாரண முகாம் மற்றும் நன்னிலம் வட்டம் வாஞ்சியாற்றின் கரை பகுதி ஆகிய இடங்களில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நேரில் பார்வையிட்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கிர்லோஷ் குமார் தெரிவித்ததாவது,



 

மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையின் காரணமாக இதுவரை கூரைவீடுகளை பொறுத்தவரை 1287 வீடுகள் பகுதியாகவும், 34 வீடுகள் முழுமையாகவும், ஓட்டு வீடுகளை பொறுத்தவரை 182 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளது. அதேபோல் கால்நடை இறப்புகளை பொறுத்தவரை 56 பசுமாடுகள், 1 எருமை மாடு, 28 கன்றுகள், 61 ஆடுகள் என மொத்தம் 146 கால்நடைகள் உயிரிழந்துள்ளது. நிவாரண முகாம்களை பொறுத்தவரை திருவாரூர் வட்டம் பழவனக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை ஆரம்ப ஆரம்ப பள்ளியில் நிவாரண முகாம் அமைக்கபட்டு 28 நபர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்டவைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

 

மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும். மழைநீர் தேங்கி இருக்கும் பகுதிகளில் மழைநீர் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட துறையினர் மேற்கொள்ள வேண்டும். கால்நடை இறப்பிற்கான பிரேத பரிசோதனை அறிக்கையை காலத்துடன் வழங்கிட வேண்டும். தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை தொடர்ந்து கண்காணித்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை வருவாய் துறையினர் மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவித்தார். அதனை தொடர்ந்து திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட ஐநூற்று பிள்ளையார்கோவில் தெருவில் தேங்கி இருக்கும் மழைநீரை வெளியேற்றும் பணியினை பார்வையிட்டனர். பின்னர் பழவனக்குடி கிராமத்தில் ஆதிதிராவிடர் நல  ஆரம்ப பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் தங்க வைக்கபட்டுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு முறையாக உணவு வழங்கப்பட்டு வருகிறதா என்பதை கேட்டறிந்தனர்.



 

தொடர்ச்சியாக நன்னிலம் வட்டம் குருங்குளம் வாஞ்சியாற்றின் கரை பகுதி பலப்படுத்தப்பட்டு உள்ளதை மாவட்ட கண்காணிப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்களும் பார்வையிட்டனர். இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மாவட்ட ஊரக வளாச்சி முகமையின் திட்ட இயக்குநர் தெய்வநாயகி, வெண்ணாறு வடிநில கோட்ட செயற்பொறியாளர் முருகவேல், பொது பணித்துறை கட்டிட பராமரிப்பு மோகனசுந்தரம், காவேரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் தமிழ்செல்வன், வருவாய் கோட்டாட்சியர் பாலசந்திரன், திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.