தமிழகத்தில் ஏப்ரம் 4ம் தேதி இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுகிறது. ஏப்ரல் 6ம் தேதி காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்குகிறது. இந்நிலையில் இறுதி பரப்புரைக்கு பின் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
*தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்தக்கூடாது
*தியேட்டர், தொலைக்காட்சிகள் உள்ளிட்ட எந்த எலெக்ட்ரானிக் சாதனம் மூலமும் பிரசாரம் மேற்கொள்ளக்கூடாது.
*இசை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிகள் மூலமும் வாக்காளர்களை கவரும் பணியை மேற்கொள்ளக்கூடாது.
*ஏப்ரல் 4ம் தேதி இரவு 7 மணிக்கு மேல் சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிக்கு அப்பாற்பட்ட யாரும் அத்தொகுதிக்குள் வசிக்க கூடாது; வெளியேற வேண்டும்.
*மாற்று தொகுதியை சேர்ந்தவர்கள் வெளியேறிவிட்டார்களா என்பதை ஒவ்வொரு விடுதி மற்றும் மண்டபங்களை ஆய்வு செய்து அதிகாரிகள் உறுதி படுத்த வேண்டும்.
*பிரசாரத்திற்கு அனுமதி வழங்கப்பட்ட வாகனங்களின் அனுமதி ஏப்ரல் 4ம் தேதியுடன் முடிந்துவிடும் என்பதால் அந்த அனுமதியை வைத்து வாகனங்கள் வலம் வரக்கூடாது. அது அனுமதிக்கப்பட மாட்டாது.
*தேர்தல் நாளான்று வாக்காளர் ஒருவருக்கு 3 வாகனத்திற்கு மட்டுமே அனுமதி. அவருக்கு ஒன்று, அவருடைய பொது முகவர் பயன்பாட்டிற்கு ஒன்று, வேட்பாளருக்காக அல்லது கட்சி பணியாற்றுவதற்காக ஒரு வாகனம் என 3 வாகனத்திற்கு அனுமதி
*வாக்காளர்களை வாக்குச் சாவடி அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும் வேட்பாளர் அனுமதி வாகனங்களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் மக்கள் பிரநிதிதுவ சட்டத்தின் படி குற்றம்.
*வாக்குச்சாவடி அமையப்பெற்றுள்ள இடத்திலிருந்து 200 மீட்டர் தூரத்தில் தற்காலிக தேர்தல் பணி பூத் அமைத்துக் கொள்ளலாம். அதில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி எல்லைக்கு உட்பட்ட 2 பேர் மட்டுமே பணியாற்ற முடியும்.
*தற்காலிக தேர்தல் பணி பூத்தில் இருந்து எந்த பொருட்களோ, உணவுகளோ வினியோகம் செய்யக்கூடாது.
இதை மீறி செயல்பட்டால் அது சிறை தண்டனைக்குறிய குற்றம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.