அரக்கோணத்தில் நடைபெற்ற இரட்டைக்கொலையை கண்டித்து சென்னையில் வி.சி.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கொலையாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.
போராட்டத்தில் பங்கேற்ற திருமாவளவன் பேசும்போது, “தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி படுதோல்வியை சந்திக்க உள்ளது. அதனால் ஏற்பட்ட விரக்தியின் விளைவாக வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். பல இடங்களில் வி.சி.க.வினர் தாக்கப்பட்டு வருகின்றனர். இந்த கொலையில தொடர்புடைய 20 பேரையும் கைது செய்ய வேண்டும். காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தியே வி.சி.க.வினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் தீவிரமாக செயல்படுவதில்லை. வழக்கையும் முறையாக பதிவு செய்வது இல்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்டப்படியான நிதியையும் வழங்குவதில்லை. இது கண்டனத்திற்குரியது. “
இவ்வாறு அவர் பேசினார்.