தனது முகவரியை கொடுத்து ஐடி ரெய்டு நடத்த வருமாறு அழைப்பு விடுத்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதியின் சொத்து மதிப்பு, அவரது தந்தை ஸ்டாலின் சொத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. 


திமுக தலைவர் ஸ்டாலினின் மகளை திருமணம் செய்த அவரது மருமகன் சபரீசன் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஒருபடி மேலே சென்று, ‛தனது முகவரியை கூறி தைரியமிருந்தால் அங்கு வந்து ரெய்டு நடத்துங்கள்,’ என பிரசாரத்தில் பேசினார். 





வருமான வரித்துறைக்கு அழைப்பு விடுக்கும் உதயநிதியின் சொத்து மதிப்பு என்ன என்பதை ஆராயும் போது, அது அவரது தந்தை மு.க.ஸ்டாலின் சொத்தை விட அதிகம் என்பது தெரியவந்துள்ளது. திரையுலகில் தயாரிப்பாளராக, நடிகராக உள்ள உதயநிதி, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட வேட்பு மனுவுடன் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்துள்ள தகவல் படி, அவரது பெயரில் ரூ.21 கோடியே 13 லட்சத்து ஒன்பதாயிரத்து 650 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 6 கோடியே 54 லட்சத்து 39 ஆயிரத்து 552 ரூபாய் மதிப்பில் அசையாச் சொத்துக்களும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதிக்கு சொந்தமான ரேஞ்ச் ரோவர் காரின் மதிப்பு மட்டும் ரூ.1 கோடியே 77 லட்சத்து 68 ஆயிரத்து 736 ஆகும்.




கையில் ரூ.75 ஆயிரம் ரொக்கம் இருப்பதாகவும், மொத்த வருமானம் ரூ.4 லட்சத்து 89 ஆயிரத்து 520 என்றும் கூறப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி பெயரில் ரூ.55 லட்சத்து 4 ஆயிரத்து 730 மதிப்புள்ள 1,600 கிராம் மதிப்புள்ள தங்கம் உட்பட ரூ.1 கோடியே 15 லட்சத்து 33 ஆயிரத்து 222 மதிப்புள்ள அசையும் சொத்து இருப்பதாகவும், அவரிடம் ரூ.50 ஆயிரம் கையிருப்பு உள்ளதாகவும், மொத்த வருவாய் ரூ.17 லட்சத்து 44 ஆயிரத்து 470 என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தந்தை ஸ்டாலினை விட மகன் உதயநிதியின் சொத்து மதிப்பு 3 மடங்கு அதிகமாகும்.