நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழகத்திலும் கடந்த 10-ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை. சித்திரைத் திருவிழா உள்பட தமிழகத்தில் வரும் மாதங்களில் பல்வேறு முக்கிய பண்டிகைககள் கொண்டாடப்படவுள்ளது.
இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை இன்று பிறப்பித்த உத்தரவில், “நோய் பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு 10.04.2021 முதல் தடை விதிக்கப்படுகிறது. 31.8.2020-இல் வெளியிட்ட அறிவிப்பின்படி, நிலையான வழிகாட்டு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி, திருக்கோயில்களில் பொதுமக்கள் வழிபாடு இரவு 8 மணிவரை அனுமதிக்கப்படும். இருப்பினும், திருக்கோயில் அத்தியாவசிய பூஜைகளில் அந்தந்த திருக்கோயில் ஊழியர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவர். திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதியில்லை.
100 சதுர மீட்டர் அல்லது 1075 சதுர அடிக்கு உள்ள கோயில்களில் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அனுமதிக்க கூடாது மற்றும் திருமண விழாக்களுக்கு 10 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. கோவில்களின் திருமண மண்டபத்தில் அதற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட நேரத்தில் மட்டுமே திருமணம் நடத்த வேண்டும். ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதித்து சமூக இடைவெளி கடைபிடிப்பதை உறுதிசெய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.