தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருவதால், கோவில் திருவிழா, மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10 முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. மேலும் கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லறை வியாபார காய்கனி கடைகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டங்களுக்கு இடையில் இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளிலும், சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளிலும் உள்ள இருக்கைகளில் மட்டும் அமர்ந்து பயணிக்கலாம். பேருந்துகளில் நின்று பயணம் செய்வதற்கான அனுமதி இல்லை என தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் 50 சதவிகிதம் இருக்கைகள் மட்டுமே நிரப்புவதற்கான அனுமதி அளிக்கப்படுவதாகவும் தமிழக அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கண்டிப்பாக இரு வாரங்களுக்குள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். அரசு மருத்துவ நிலையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கொரோனா தொற்று அறிகுறி இருந்தால், தாமதமின்றி மருத்துவமனையை அணுக வேண்டும். பொதுமக்கள் இதற்கான முழு ஒத்துழைப்பையும் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளில் மதுபான விற்பனைக்கு எவ்வித கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது