மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை இயக்கத்தின் பொதுச் செயலாளரம், பெரியாரிய அறிஞருமான வே. ஆணைமுத்து இயற்கை எய்தினார். அவருக்கு வயது 96.
வே. ஆணைமுத்துவின் மறைவுக்கு அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் இரங்கல் செய்தியை பதிவிட்டு வருகின்றனர்.
மே 17 இயக்கம் ஒருங்கைனப்பாளர் திருமுருகன் காந்தி தனது இரங்கல் செய்தியில், "பெரியாரின் பெருந்தொண்டர், சமரசமில்லா போராளி, இந்திய துணைக்கண்டம் முழுதும் சுற்றித்திரிந்து இட ஒதுக்கீட்டிற்கான அரசியலை விரிவுபடுத்தியவர், எங்களுக்கெல்லாம் வழிகாட்டி, மார்க்சியத்தையும், பெரியாரியலையும் இணைத்து முன்னெடுத்த அறிஞர்.ஐயா.ஆனைமுத்து மறைந்தார்
96 வயதைக் கடந்த நிலையிலும், இறுதி நாள் வரையில் களத்தில் மக்களோடு நின்ற பெரும் போராளி. அவரது கணீரென்ற குரல் , வசீகரிக்கும் சிந்தனைப் பேச்சு, உடன் நிறைவேற்றும் செயல்திறன், தன்னலமற்ற சிந்தனையாளர் என அவரது பரிமாணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம்.
2018 கருஞ்சட்டை் பேரணியில் இளைஞராக பங்கெடுத்து உற்சாகம் கொடுத்தவர். அவரது நூற்தொகுப்புகள் சுயமரியாதை-பகுத்தறிவு அரசியலுக்கு இன்றியமையாதவை. பெரியாரின் சிந்தனைகளை தொகுத்தளித்த அவரது அயராத உழைப்பை தமிழகம் என்றென்றும் நன்றியோடு நினைவுகூறும். கருஞ்சட்டை படையின் முத்த தளகர்த்தருக்கு வீரவணக்கம் செலுத்துகிறது மே17 இயக்கம் " என்று தெரிவித்தார்.
பழைய திருச்சிராப்பள்ளி மாவட்டம் பெரம்பலூர் வட்டம் முருக்கன்குடி எனும் சிற்றூரில் வேம்பாயி - பூவாயி அம்மாள் இணையருக்கு மூத்த மகனாக 21.06.1925 இல் வே.ஆனைமுத்து பிறந்தார்.
1940 இல் வீரானந்தபுரம் ந.கணபதி ஆசிரியரின் வழிகாட்டுதலில் பகுத்தறிவு கொள்கைகளை ஏற்றார். 1944 இல் வேலூரில் நடைபெற்ற தந்தை பெரியாரின் சொற்பொழிவுகளைக் கேட்ட பிறகு சுயமரியாதை கொள்கைகளை ஏற்று, தனது எழுத்தின் மூலமும், பல்வேறு பணிகளின் மூலமும் மக்களுக்கு பணியாற்றியவர்.