மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் கடந்த 25.03.2020 முதல் தளர்வுகளுடன்கூடிய கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே அமலில் உள்ள சில தளர்வுகளுடன் கூடிய கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக சில கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றது என்று தமிழக அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணம்செய்வதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பயணிகள் நின்றுகொண்டு பயணிக்க அனுமதியில்லை.
காய்கறி கடைகள், ஷாப்பிங் மால்கள், பல சரக்கு கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 11 மணிவரை செயல்படலாம், அதேசமயம் 50 சதவிகித வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேநீர் கடைகள், உணவகங்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் இரவு 11 மணிவரை 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் செயல்படலாம்.
திருமண நிகழ்வுகளில் 100 பேரும், இறுதிச்சடங்குகளில் 50 பேர் வரையிலும் பங்கேற்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
வழிபாட்டுத் தளங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அதேசமயம் திருவிழாக்கள் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை. மேலும் பல கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் எந்தவித தடையும் அறிவிக்கப்படவில்லை என்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.