1. நேர்காணல் நடைமுறையை அறிந்து கொள்ளுங்கள்


லைவ் வீடியோ நேர்காணல் மற்றும் பதிவு செய்யப்பட்ட வீடியோ நேர்காணல் என இரண்டு வகையில் ஆன்லைன் நேர்காணல்கள் நடத்தப்படுகிறது.  


லைவ் வீடியோ ஆன்லைன் நேர்காணல் மிகவும் பிரபலமான ஒன்றாகும். ஜூம், மை இன்டர்வியூ, கூகிள் ஹேங்கவுட்ஸ், ஸ்கைப் போன்ற வீடியோ கான்ஃபரன்சிங் தளத்தின் மூலம் நேர்காணல் நடைபெறும். 


முன் பதிவுசெய்யப்பட்ட காணொளி நேர்காணல்களில், ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் திரையில் தோன்றும் கேள்விகளுக்குப் பதிலளித்து நேர்காணல் செய்பவருக்கு பதிவேற்றம் செய்யவேண்டும். எனவே, நேர்காணலின் நடைமுறையை அறிந்து தயாராவது சரியாக இருக்கும்.


2. பயிற்சி வேண்டும்


தெளிவான மனநிலையுடன் நேர்காணலை எதிர்கொள்வது வெற்றிக்கு இன்றியமையாதது. நேர்காணல் நாளன்று ஏற்படும் பதற்றங்களை போதிய பயிற்சியின் மூலமாக சரிசெய்துவிடலாம். பணியிடம் தொடர்பான ஆய்வை அதிகரித்துக் கொள்ளுங்கள். ஆட்சேர்ப்பு நிறுவனம் பற்றியும் அதன் தயாரிப்பு  மற்றும் சேவைகள் பற்றியும் நன்றாக தெரிந்துகொள்ளுங்கள். Linked In அல்லது Glass door போன்ற பிரபல சமூகவலைப்பின்னல் தளங்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.


நிறுவனம் உங்களின் தயார்நிலையை அறிந்து கொள்ளுவதில் அதிக ஆர்வம் கொள்கிறது. நிறுவனத்தின்  இலக்குகள், குறிக்கோள்களை அறிந்துகொள்ளுங்கள். சந்தையில் அவர்களின் தனித்துவங்கையும் அறிந்து கொள்ளுங்கள்.
 
3.  நேர மேலாண்மை


 நேர்காணலுக்கான சரியான நேரத்தை தெரிந்துகொள்ளுங்கள். சர்வதேச நிறுவனம் உங்களை நேர்காணல் செய்கிறது என்றால், உலகளாவிய நேர மண்டலத்துடன் உள்ளூர் நேர மண்டலத்தை சரிபார்த்து கொள்ளுங்கள்.   குறைந்தது அரை மணிநேரத்திற்கு முன்பாகவே உங்கள் வீடியோ கான்ஃபரன்சிங் மென்பொருளைப் பதிவிறக்கி, எல்லா அமைப்புகளும் சரியாக வேலை செய்கின்றனவா என்பதை சோதித்து பார்த்துக்கொள்ளுங்கள் . 


 4. தகுந்த இடத்தை தேர்வு செய்யவும்


வீட்டில் உள்ள சிறந்த அறையை நேர்காணலுக்கு தேர்வு செய்துகொள்ளுங்கள். நேர்காணலின்போது குடும்ப உறுப்பினர்கள் அல்லது குழந்தைகள் குறுக்கிடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள்.  
 


5. ஆடை முக்கியம்


 ஆன்லைனில் நேர்காணல்  நடைபெற்றாலும் உடைத்தேர்வு மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. நிறுவனத்துக்கு ஏற்ப ஆடையைத் தேர்ந்தெடுப்பதும் புத்திசாலித்தனம். சில நிறுவனங்கள், குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், சாதாரண நடுத்தர மக்கள் அணியும் ஆடைகளை விரும்புகின்றன. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், டி-ஷர்ட், ஜீன்ஸ் போன்ற மிகவும் சாதாரண உடையை ஒருவர் தேர்வு செய்யலாம். 


6.  தடையற்ற நேர்காணலுக்கு நினைவில் கொள்ளவேண்டிய சில குறிப்புகள்:


ஆன்லைன் நேர்காணலுக்கு லேப்டாப், டேப்லெட் அல்லது டெஸ்க்டாப்பைத் தேர்வு செய்யவேண்டும். ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். நேர்காணல் செய்பவரை பார்ப்பதற்குப் பதிலாக வெப்கேமை பார்த்து பதிலளிப்பது மிகவும் நல்லது. நேர்காணலுக்கு முன்னதாக, இணைய இணைப்பு, மைக்ரோஃபோன் மற்றும் கேமரா சரியாக வேலைசெய்கிறதா என்பதை சோதித்துப் பாருங்கள். வார்த்தைகள் மெதுவாகவும் சீராகவும் இருக்க வேண்டும்.


 7. உடல்மொழியில் கவனம் செலுத்துங்கள்:


நேர்காணலின் போது  உடல்மொழி, சைகைகள் மற்றும் கண்ணின் அசைவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்.  உங்கள் ஆர்வத்தையும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியுடன் வெளிப்படுத்துங்கள். கேள்விகளுக்கு உற்சாகத்துடன் பதிலளிக்க தொடங்குங்கள் .