சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அந்தந்த கட்சித் தலைவர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மதுரை கிழக்குத்தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்.கோபாலகிருஷ்ணனுக்கு ஆதரவாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று பரப்புரையில் ஈடுபட்டார். 


பரப்புரையில் பேசிய ஓ.பி.எஸ், "எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு அனைத்து தரப்பு மக்களுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அ.தி.மு.க. அரசு மூன்றாவது முறையாக அமைந்ததும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் கட்டாயம் நிறைவேற்றப்படும். 2006-ஆம் ஆண்டில் தி.மு.க அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிவிட்டது.




தேசிய அளவில் உயர்கல்விக்கு வருவோர் 24 சதவிகிதம்தான். ஆனால், தமிழகத்தில் உயர்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கை 44 சதவீதம். தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள்தான் இதற்கு காரணம். கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் 6.87 லட்சம் கோடி முதலீடுகள் வந்துள்ளது.


தி.மு.க-வின் தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது. அது செல்லாததாகிவிடும். ஆனால், அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை நல்லநோட்டு போன்றது. அதற்குதான் மதிப்புண்டு. எனவே, தி.மு.க.வின் ஏமாற்று வேலையை மக்கள் நம்ப வேண்டாம்" என்றார்