அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக்கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் தாக்கல் செய்த மனுவிற்கு பதிலளிக்க சசிகலாவுக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


அதிமுக பொதுச் செயலாளராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலக்குறைவு காரணமாக 2016-ஆம் ஆண்டு டிசம்பர் 6-ஆம் தேதி மரணம் அடைந்தார். அதன் பின்னர் பொது செயலாளராக வி.கே சசிகலாவும் துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரன் அதிமுகவினர் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர்.

இதன் பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா நான்காண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார். அவர் சிறையில் இருந்தபோது, 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி அதிமுக பொதுக்குழு சென்னையில் நடைபெற்றது. அந்த பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, அதிமுகவின் பொதுக்குழுக்கூட்டம் செல்லாது என அறிவிக்கக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் குறிப்பாக தங்களை கட்சியின் பொதுச்செயலாளர் மற்றும் துணைப்பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கியது செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியிருந்தனர்.


பின்னர் இந்த வழக்குகள் சென்னை நகர சிவில் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த முறை இந்த வழக்குகள் விசாரனைக்கு வந்தபோது, டி.டி.வி.தினகரன் அமமுக என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருவதால் இந்த வழக்கில் இருந்து தான் விலகி கொள்வதாக டி.டி.வி.தினகரன் தரப்பில் தெரிவிக்கபட்டது.

இன்று இந்த வழக்கு மீண்டும் நீதிபதி ரவி முன்பு விசாரணைக்கு வந்தபோது, சசிகலா தொடர்ந்த வழக்கை நிராக்கக்கோரி அதிமுக நிர்வாகிகள் சார்பில் மனு தாக்கல் செய்யபட்டது. இதையடுத்து இந்த மனுவிற்கு சசிகலா பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஏப்ரல் 23-ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.