தமிழகத்தில் கடந்த சில தினங்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடுமையாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் சுமார் 500 பேர் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் முகக்கவசம் அணியாததும் தேர்தல் நேரம் என்பதால் நடந்து வரும் பொதுக்கூட்டங்களும் கொரோனா எண்ணிக்கை அதிகரிக்க காரணமாக பார்க்கப்படுகிறது. மேலும் மக்களிடையே காணப்படும் அலட்சிய போக்கும் கொரோனா பாதிப்பை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளார்களை சந்தித்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் “தமிழகத்தில் கொரோனா ஏறுமுகத்தில் இருக்கிறது, பரிசோதனை செய்யப்பட்ட ஒரு விழுக்காடு நபர்களுக்கு பாதிப்பு இருந்த நிலையில், தற்போது அது இரண்டு விழுக்காடாக உயர்ந்துள்ளது” என்றார்.
மேலும் “மக்கள் நமக்கு கொரோனா வராது என்ற எண்ணத்தில் இருக்கக்கூடாது, உரிய வழிமுறைகளை பின்பற்றாததே இந்த திடீர் உயர்வுக்கு காரணம், அதோடு கொரோனா பரவல் நின்றுவிட்டது, நம்மைவிட்டு போய்விட்டது என்ற எண்ணம் மக்களுக்கு வந்துவிட்டது, அது முழுக்க முழுக்கத் தவறாகும்” என்றார்.