மேட்டூர் அணை வருகின்ற ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக திறக்கப்படும் என தமிழக அரசு சார்பில் நேற்று அறிவித்துள்ள நிலையில், காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆறு மற்றும் வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் 16.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆறுகள் மற்றும் வடிகால், பாசன வாய்க்கால்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக தமிழக நீர்வள ஆதார துறை செயலாளர் சந்தீப் சக்சேனா இன்று திருவாரூர் வருகை தந்தார். முதற்கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூர்வாரும் பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே ஓடம்போக்கியாற்றில் 27 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரப்படும் பணிகளை சந்தீப் சக்சேனா நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து புலிவலம் முதல் கானூர் வரை ஓடம்போக்கியாறு தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த நீர்வள ஆதார துறை செயலாளர் கொட்டாரக்குடி பகுதியில் காட்டாறில் நடைபெறும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்தார்.



 

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நீர்வள ஆதார துறை செயலாளர் சந்தீப் சக்சேனா கூறியதாவது :-

 

திருவாரூரில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்யும்போது, தேவையான இயந்திரங்கள் இருப்பதாகவும் அதனை இயக்குவதற்கு பணியாளர்கள் இல்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா காரணத்தால் ஓட்டுநர்கள் சொந்த ஊர் சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் மூலமாக அவர்களை மீண்டும் பணிக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

மேலும் வேளாண் பொறியியல் துறை சார்பிலும் பொதுப்பணித் துறை சார்பிலும் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு டெல்டா அல்லாத பிற மாவட்டங்களில் இருந்தும் கூடுதலாக இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு தூர்வாரும் பணிகள் தீவிரப்படுத்தப்படும். அதுமட்டுமல்லாமல் விவசாயிகள் கொண்ட குழுவை அமைத்து எப்போது எங்கு தூர்வாரப்படும் எப்போது பணி நிறைவடையும் என்ற தகவல்களையும் விவசாயிகளுக்கு தெரிவிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல விவசாயிகள் அடங்கிய குழுவினரிடம் ஆலோசனைகளும் பெறப்பட்டு விவசாயிகளின் பகுதிகளில் இருக்கக்கூடிய அத்தனை தேவைகளையும் நிறைவேற்ற வேளாண்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

 

ஏ மற்றும் பி சேனல் வாய்க்கால்கள் வருவாய்த்துறை சார்பில் தூர்வாரப்பட்டு வருகின்றன. சி மற்றும் டி சேனல் வாய்க்கால்கள் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கடைமடை வரை தண்ணீர் செல்ல வேண்டுமென்றால் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் சி மற்றும் டி சேனல் வாய்க்கால்கள் தூர்வாரப்பட வேண்டும். அவைகளும் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் விரைந்து தூர்வாரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.



 

தமிழக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதுவரை அணை கட்டும் பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. தமிழக அரசு சார்பில் மேகதாதுவில் அணை வராத அளவிற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். கர்நாடகாவில் இருந்து இந்த மாதம் 2.5 டிஎம்சி தண்ணீர் தமிழகத்திற்கு வரவேண்டி இருந்தது. தற்போது வரை 1.83 டிஎம்சி அளவிற்கு தண்ணீர் வந்துள்ளது.

 

ஆறுகளில் தண்ணீர் வருவதற்குள் தூர்வாரும் பணிகள் முடிக்கப்படும். அதற்காகவே தூர்வாரும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். நான் உட்பட எட்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கூடுதலாக 20 சதவீதம் இயந்திரங்களை பெற்றுள்ளோம். எனவே குறித்த நேரத்தில் ஆறுகளில் தண்ணீர் வருவதற்குள் தூர்வாரும் பணிகள் நிறைவடையும் என்றார்.