தி.மு.க., கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான அறிக்கையை சென்னை சத்தியமூர்த்தி பவனில் அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டார். அதில் குறிப்பாக கூட்டணி தலைமையான தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லை என்ற விமர்சனம் ஒருதரப்பினரால் முன்வைக்கப்படும் நிலையில், அதனை  காங்கிரஸ் பிரதானமாக முன்வைத்துள்ளது.




உள்ளாட்சிகளுக்கு உரிய அதிகாரம் வழங்க நடவடிக்கை. தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வில் சிறந்த 5 மாணவர்கள் தேர்வு செய்து அவர்களை திறனுள்ளவர்களாக மாற்றி பணியமர்த்தும் முயற்சி.  தொழில் முதலீடு செய்யும் முனைவோருக்கு 5 ஆண்டுகளுக்கு வரிவிலக்கு வழங்க நடவடிக்கை.  தமிழக சட்டமன்றத்தில் மேலவையை மீண்டும் கொண்டு வர முயற்சி. ஜாதி மறுப்பு கொலைகளுக்கு எதிரான தனிச்சட்டம், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தபட்டடோர் துறையை நேரடியாக முதல்வரின் கட்டுப்பாட்டில் கொண்டு வர நடவடிக்கை,  அரசின் டெண்டரில் வெளிப்படை தன்மை,  மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்தல், கட்டாய கல்வி உரிமை சட்டம் 12ம் வகுப்பு வரை நீட்டிப்பு,  போக்சோ சட்டத்தை கண்காணிக்க மாவட்டம் தோறும் தனி அமைப்பு,  கல்வியிலும், வேலையிலும் பெண்களுக்கு சமவாய்ப்பு, தமிழக விவசாயிகளை பாதுகாப்பு புதிய வேளாண் சட்டம் போன்ற பல்வேறு அம்சங்கள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.