ஆளும் அதிமுக கூட்டணியிலிருந்தபடி வருகின்ற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பாரதிய ஜனதா கட்சி 17 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. குஷ்பு, வானதி ஸ்ரீனிவாசன் மற்றும் சி.கே.சரஸ்வதி ஆகிய மூன்று பெண்களின் பெயர் வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன. குஷ்பு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுகிறார். பட்டியலில் பெயர் வெளியானதை அடுத்து தான் போட்டியிடும் தொகுதிக்குச் சென்று அவர் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, “காங்கிரசும் திராவிட முன்னேற்றக் கழகமும் பெண்களிடமிருந்து கட்டளைகளை ஏற்றுக்கொள்ளத் தயங்கும் கட்சிகள்.


எத்தனைப் பெண்களுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட இடமளித்திருக்கிறார்கள். தேர்தலில் போட்டியிட என் பெயரைப் பரிசீலித்த பாரதிய ஜனதா டெல்லி தலைவர்களுக்கு நான் மிகவும் நன்றிக்கடன்பட்டுள்ளேன்” என்று அவர் குறிப்பிட்டார். காங்கிரஸில் செய்தித் தொடர்பாளராக இருந்த குஷ்பு சென்ற வருடம் பாரதிய ஜனதாவில் தன்னை இணைத்துக்கொண்டார். தான் கட்சியிலிருந்து விலகுவது குறித்து சோனியா காந்திக்கு அவர் எழுதிய கடிதம் அப்போது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.




குஷ்புவின் கருத்துக்கு ஏற்ப காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ள வேட்பாளர்கள் பட்டியலில் பெண்கள் ஒருவர் பெயர் கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து அண்மையில் காங்கிரஸ் பாராளுமன்ற எம்.பி ஜோதிமணிக்கும் தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணாவுக்கும் இடையே வாக்குவாதம் வேறுபாடு ஏற்பட்டது கவனிக்கத்தக்கது.