தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் சென்னை, விருகம்பாக்கம் தொகுதியின் வாக்காளராக உள்ளார். இதையடுத்து, இன்று விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது கணவருடன் தமிழிசை சவுந்திரராஜன் வாக்களித்தார்.
பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்த ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், "இன்றைய தினம் நம் நாட்டுக்கு பெருமைமிகு தினம். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான நம் பாரத தேசத்தில் இன்று தமிழகத்திற்கும் புதுவைக்கும் தேர்தல் நடைபெறுகிறது. நான் தமிழக வாக்காளர் என்ற முறையில் காலையில் நானும் எனது கணவர் சவுந்தரராஜனும் வாக்கு செலுத்திவிட்டு புதுவைக்கு விரைந்து கொண்டிருக்கிறோம்.
எனது வேண்டுகோள் வாக்காளர்கள் 100% முகக்கவசம் அணிய வேண்டும். 100% வாக்குகள் பதிவாக வேண்டும். தயவு செய்து முகக்கவசம் அணிந்து வாருங்கள். வாக்குச்சாவடியில் கையுறைகள் வழங்கப்படுகின்றன. தயவுசெய்து கையுறைகளை வாக்களித்தபின் கவனமாக, கண்ட இடங்களில் போடாமல் அதை சரியாக குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு செல்லுங்கள். வரிசையில் நிற்கும்போது தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
வாக்களிப்பது எவ்வளவு முக்கியமோ அதேபோன்று எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் வாக்களிப்பது முக்கியம். கூட்டம் வருவதற்கு முன்னால் வந்து அமைதியாக காத்திருந்து வாக்களியுங்கள். வாக்குச்சாவடிகளில் வயதானவர்களுக்கு தண்ணீர் கொடுங்கள். ஆளுநராக அல்ல, வாக்காளராக சொல்கிறேன். அனைவரும் பாதுகாப்பாக ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும்.“
இவ்வாறு அவர் கூறினார்.