அவசர பயன்பாட்டிற்கு Zydus cadila நிறுவனம் தயாரித்த Virafin தடுப்பூசிக்கு தேசிய கட்டுப்பாட்டாளர் (இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர்) அனுமதி அளித்துள்ளது. தற்போது  கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் இரண்டு முறை போடப்படவேண்டும். ஆனால்,  Virafin தடுப்பு மருந்து ஒரு முறை போட்டால் போதும் என்று தெரிவிக்கப்படுகிறது. 


முன்னதாக, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் போன்ற பல்வேறு வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டு, அவசரகால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள தடுப்பூசிகளுக்கு இந்தியாவில் பயன்படுத்த அனுமதி தருமாறு கோவிட்-19 தடுப்பூசி போடுவதற்கான தேசிய நிபுணர் குழுவின் நிபுணர் குழு பரிந்துரைத்தது. மேலும், மேலும், இந்தத் தடுப்பூசிகளை நாட்டில் முழுவீச்சில் பயன்படுத்துவதற்கு முன்னர் தடுப்பூசி செலுத்தப்படும் முதல் 100 பேரை, 7 நாட்களுக்கு கண்காணித்து பாதுகாப்புத்தன்மை உறுதிப்படுத்தப்படலாம் என்றும் தெரிவித்தது. 


இதுதொடர்பாக அந்நிறுவனம்  வெளியிட்ட செய்திக்குறிப்பில், “ மற்ற தடுப்பூசிகளை ஒப்பிடும் போது, இது மலிவானதாகவும், பாதுகாப்பானதாகவும் உள்ளது.  ஒரு டோஸ் போட்டுக்கொண்டால் போதும். இது சிறந்த இணக்கத்தை உறுதி செய்யும். நாள்பட்ட ஹெபடைடிஸ் பி மற்றும் சி நோய்களுக்கு PegIFN சிகிச்சை முறை நல்ல பாதுகாப்பை அளித்துள்ளது. மருத்துவ  பரிசோதனையின் போது துணை ஆக்ஸிஜன் தேவையை தடுப்பூசி வெகுவாக குறைத்தது. எனவே, இரண்டாவது கொரோனா அலையில் அதிகம் காணப்படும் மூச்சுத்திணறல் பிரச்சனையை இம்மருந்து கட்டுப்படுத்துகிறது" என்று தெரிவித்தது.  


மே 1-ஆம் தேதி முதல், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கும் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது பாரத் பயோடெக் சர்வதேச நிறுவனத்தின் கோவாக்சின் மற்றும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகளின் அவசர பயன்பாட்டிற்கு இந்திய மருந்துகள் தலைமை கட்டுப்பாட்டாளர் இந்த ஆண்டு தொடக்கத்தில் அனுமதி அளித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


அதிகரிக்கும் கொரோனா :    


நாட்டில் இதுவரை 13.54 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப் பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும், 31 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டன. 



கடந்த 24 மணிநேரத்தில் 3,32,730 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 67,013 பேருக்கு நேற்று புதிதாக பாதிப்பு ஏற்பட்டது. அடுத்ததாக உத்தரப்பிரதேசத்தில் 34,254 பேருக்கு தொற்று ஏற்பட்டது. கேரளாவில் 26,995 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நாட்டில் தற்போது கொரோனா நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 24,28,616-ஐ எட்டியுள்ளது.



கடந்த 24 மணிநேரத்தில் 2,263 பேர் உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 568 பேரும், டெல்லியில் 306 பேரும் நேற்று உயிரிழந்தனர்.