ABP  WhatsApp

Election Results 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Will TN need Oxygen from vedanta? | வேதாந்தாவின் ஆக்சிஜன் தமிழ்நாட்டுக்குத் தேவைப்படாது, ஏன்?

ஐஷ்வர்யா சுதா Updated at: 23 Apr 2021 06:43 PM (IST)

மெடிக்கல் ஆக்சிஜன் போதுமான அளவு கையிருப்பு உள்ளதால் வேதாந்தாவின் தொழிற்சாலை ஆக்சிஜன் நமக்குத் தேவைப்படாது. இந்தக் கையிருப்புக்காகத் தன்னை எப்படித் தயார்படுத்திக்கொண்டது விவரிக்கிறார் முன்னாள் பொது சுகாதார இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி.

ஸ்டெர்லைட் நிறுவனம்

NEXT PREV

கொரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய இந்தியாவின் ஆக்சிஜன் தேவை நாளொன்றுக்கு 700 மெட்ரிக் டன்னாக இருந்தது. தொற்றுக்குப் பிறகு கடந்த வருடத் தேவை நாளொன்றுக்கு மட்டும் 2800 மெட்ரிக் டன் என அதிகரித்தது. தற்போது இரண்டாம் அலை பேரிடர் காலத்தில் இந்திய மருத்துவமனைகளில் நாளொன்றுக்கு 5500 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவையாக இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கலாம். இந்தச் சூழலில்தான் தொழிற்சாலைகளின் உற்பத்தி  ஆக்சிஜன்களை (Industrial Oxygen) மத்திய அரசு மருத்துவத் தேவைகளுக்காக திருப்பிவிட்டது.




இதன்மூலம் மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவக் கருவிகள் உற்பத்திக்கான ஆக்சிஜன்கள் தவிர இரும்பு உள்ளிட்ட பிற தொழிற்சாலைகளின் உற்பத்தி நிறுத்திவைக்கப்பட்டு அந்தத் தொழிற்சாலைகளின் ஆக்சிஜன் மருத்துவத் தேவைகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டன. சில தொழிற்சாலைகள் தாமாகவே முன்வந்து ஆக்சிஜன் உற்பத்திச் செய்து தருவதாக அரசிடம் முறையிட்டிருக்கின்றன. அந்த வரிசையில் தூத்துக்குடி வேதாந்தா ஸ்டெர்லைட் ஆலை ஆக்சிஜன் உற்பத்திச் செய்வதாகக் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையிட்டதை  தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.


அதில் ’மக்கள் ஆக்சிஜன் இல்லாமல் இறந்துகொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில் யார் ஆக்சிஜன் தயாரிக்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில் எங்களுக்கு விருப்பமில்லை. ஆக்சிஜன் தயாரிப்பதை உறுதிபடுத்தவேண்டியதுதான் நமது நோக்கம்” என நீதிமன்றம் கருத்து கூறியுள்ளது.

 



இது என்னமாதிரியான வாதம்? தமிழ்நாடு அரசே ஏன் வேதாந்தாவில் ஆக்சிஜன் உற்பத்திச் செய்யக் கூடாது. அதைத் தேவைப்படும் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கிட்டு அளிக்கலாமே- உச்சநீதிமன்றம்


எதிர்மனுதாரராக ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோலின் கோன்சால்வேஸ் தமிழ்நாட்டில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதால் அவர்கள் ஆக்சிஜன் உற்பத்திச் செய்யமாட்டார்கள் எனக் கூறினார்.இதற்குப் பதிலளித்த நீதிபதிகள், “இது என்ன மாதிரியான வாதம்? தமிழ்நாடு அரசே ஏன் வேதாந்தாவில் ஆக்சிஜன் உற்பத்திச் செய்யக் கூடாது. அதைத் தேவைப்படும் அனைத்து மாநிலங்களுக்கும் பங்கிட்டு அளிக்கலாமே” என்றனர். தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் ”2018 தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைப் போன்று மீண்டும் ஒரு அசம்பாவிதம் நிகழ்ந்துவிடக் கூடாது என நாங்கள் எச்சரிக்கையாக இருக்கிறோம்”  என்றார். இன்னும் இரண்டு நாட்களில் இதுதொடர்பான அஃபிடவிட்டையும் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்ய உள்ளது.  


கோலின் கோன்சால்வேஸ் சொன்னதுபோல வேதாந்தாவின் ஆக்சிஜன் உற்பத்தித் தமிழ்நாட்டுக்கு தேவைப்படாது. ஏனெனில், கடந்த வருடம் மே மாதமே முன்னாள் பொது சுகாதார இயக்குநர் மருத்துவர் குழந்தைசாமி தலைமையிலான நிபுணர்கள் குழு நெருக்கடிக்கால மருத்துவத் தேவைகள் குறித்த முன் திட்டத்தை வரையறுத்துத் தமிழ்நாட்டு அரசிடம் கொடுத்திருந்தது. அதன்படி கடந்த ஒருவருடமாக தமிழக அரசு மருத்துவமனைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வந்தன.


வேதாந்தாவின் ஆக்சிஜன் நமக்குத் தேவைப்படாது ஏனென்றால்..


பேரிடர் காலத்தில் சூழலைச் சமாளிப்பதற்காகக் கடந்த ஒருவருடத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்து விவரிக்கிறார் குழந்தைசாமி,  “எதிர்காலத் தேவைகளை முன்பே அனுமானித்து 2 கிலோ லிட்டர் மற்றும் 20 கிலோ லிட்டர் ஆக்சிஜன் சேகரிப்புத் தொட்டிகள் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் கட்டமைக்கப்பட்டன. 


இரண்டு கட்டடங்களாக இருக்கும் நிலையில் இரண்டு 10 கிலோ லிட்டர் தொட்டிகளாகத் தனித்தனியே பொருத்தப்பட்டன. கடந்த ஒருவாரத்துக்கு முன்புவரை கூட  வேலூர் மருத்துவக் கல்லூரிக்கு ஆக்சிஜன் சேமிப்புத் தொட்டிக்காகக் கமிஷன் செய்யப்பட்டிருக்கிறது. இவை தவிர 100-200 கோடி ரூபாய் செலவில்  மருத்துவமனை மேனிஃபோல்ட் ரூம்களுக்கான ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அது செலுத்தப்படும் அளவைக் கணக்கிடும் ஃப்ளோ மீட்டர்கள் ஆகியவைக் கடந்த ஒரு வருடங்களாகத் திட்டமிட்டுக் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன.





எதிர்காலத் தேவைகளை முன்பே அனுமானித்து 2 கிலோ லிட்டர் மற்றும் 20 கிலோ லிட்டர் ஆக்சிஜன் சேகரிப்புத் தொட்டிகள் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில் கட்டமைக்கப்பட்டன.- டாக்டர் குழந்தைசாமி, முன்னாள் பொதுச்சுகாதார இயக்குநர்


 ஒருவருடத்துக்கு முன்பு மதுரை அரசு மருத்துவமனைகளில் 300 ஆக்சிஜன் படுக்கைகள் மட்டுமே இருந்த நிலையில் அவை எதிர்கால தேவை கருதி அதிகரிக்கப்பட்டன. மேலும் மருத்துவமனைகளுக்கான மெடிக்கல் ஆக்சிஜன்கள் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி என நகரங்களில் இருக்கும் மெடிக்கல் கேஸ் ஏஜென்சிகளின் வழியாகத் தொடர்ந்து விநியோகிக்கப்படுகின்றன. இந்திய ஆக்சிஜன் நிறுவனம் மற்றும் ஐநாக்ஸ் சேகரிப்பு தொட்டிகளுக்கான ஆக்சிஜன்களை நமக்கு லாரிகளில் எடுத்துவந்து விநியோகிக்கின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்கள் வரை தேவையான ஆக்சிஜன் கையிருப்புக்கான வசதிகள் முன்பே செய்யப்பட்டிருக்கின்றன. முதல் அலைக்காலத்தில் இத்தனை தயாரிப்புகளுடன் நாம் இல்லை. ஆனால் எதிர்கால நெருக்கடியை முன்பே உணர்ந்து நாம் முன் தயாரிப்புப் பணிகளை மேற்கொண்டதால் நமது மாநிலத்துக்கு மெடிக்கல் ஆக்சிஜன் தட்டுப்பாடே ஏற்படாது” என்றார்.




ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கு ஸ்டெர்லைட் ஆலையைத்தான் திறக்கவேண்டுமா?


” உச்சநீதிமன்ற அறிவுரையின்படியே ஆக்சிஜன் உற்பத்தி செய்வதை மாநில அரசே மேற்கொள்ளலாம். ஆனால் அதை ஸ்டெர்லைட் ஆலையில்தான் உற்பத்தி செய்யவேண்டும் என்று இல்லை. கடலூர், சென்னை, தூத்துக்குடியின் சிப்காட்களில் உள்ள ரசாயனத் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்து அதில் கழிவுகள் மற்றும் விஷவாயுகள் இருக்கின்றனவா என்பதைப் பரிசோதித்து ஏற்றுமதி செய்யலாம்” என்கின்றனர் மெடிக்கல் ஆக்சிஜன் உற்பத்தி நிபுணர்கள்.  

Published at: 23 Apr 2021 06:43 PM (IST) Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.