இந்தியாவிலுள்ள பிரபல தகவல்தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று ஸோஹோ.  இந்த நிறுவனத்தின் நிறுவன ஶ்ரீதர் வேம்பு தற்போது தன்னுடைய சொந்த ஊரில் இருந்து கொண்டு பணி செய்து வருகிறார். அத்துடன் கிராம புறங்களில் தன்னுடைய நிறுவனங்களை கட்டமைக்க திட்டமிட்டு வருகிறார். கடந்த இரண்டு ஆண்டுகளில் கிராம புறங்களில் ஸோஹோவின் சில கிளைகளையும் இவர் தொடங்கியுள்ளார். 


இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஶ்ரீதர் வேம்பு தன்னுடைய கிராமத்தில் பொங்கல் கொண்டாடுவது தொடர்பாக வீடியோ ஒன்றை ஆடிட்டர் குருமூர்த்தி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில் ஶ்ரீதர் வேம்புவை குறித்து, ஒரு நிறுவனர் எப்படி தன்னுடைய ”மிகச் சாதாரணமான ஊர் மக்களுடன்” பொங்கல் கொண்டாடுகிறார் என்று பதிவிட்டிருந்தார். மக்களை மிகச் சாதாரணர்கள் என்று குறிப்பிட்டது தொடர்பாக பலரும் ட்விட்டர் பக்கத்தில் விமர்சனத்தை முன்வைத்தனர். தன்னை உயர்வாக நினைப்பதால் இப்படி சொல்லத் தோன்றுகிறது என விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன






இதைத் தொடர்ந்து ஶ்ரீதர் வேம்பு தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், "நான் ஒரு சாதாரண குடும்பத்திலிருந்து தான் வந்துள்ளேன். என்னை பொறுத்தவரை பணம் என்பது ஒருவரை மேலே தூக்க உதவும் கருவி மட்டுமே. அதிலும் குறிப்பாக கிராமபுறங்களிலிருந்து வரும் ஏழை எளியவர்களை உயர்த்தவே அது பயன்படும். என் மீது இழிவாக தாக்குதல் நடத்தியவர்களை பார்த்து நான் பயப்பட போவதில்லை தர்மம் தலை காக்கும்" எனப் பதிவிட்டிருந்தார். மேலும் குருமூர்த்தி அவரைக்குறித்து போட்ட பதிவுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார். துக்ளக் தன் வாசிப்புக்கு துணை புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.






இவைதவிர ஊரடங்கு காரணமாக கிராமப்புறங்களில் எவ்வளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாகவும் மற்றொரு ட்வீட்டை அவர் செய்துள்ளார். அதில் ஊரடங்கு மூலம் கிராமபுறங்கள் மற்றும் அப்பகுதியிலுள்ள சிறுவர்கள் 2 ஆண்டுகள் சரியாக பள்ளிக்கு செல்லவில்லை மற்றும் அவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் செல்ல போதிய இணைய சேவையும் இல்லை போன்றவற்றை அவர் சுட்டிகாட்டியுள்ளார். 










இவ்வாறு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஶ்ரீதர் வேம்பு பதிவிட்டுள்ளார். 


மேலும் படிக்க: 10,11,12 வகுப்புகளுக்கு ஜனவரி 31-வரை ஆன்லைன் வகுப்புகள் - தமிழக அரசு அறிவிப்பு