சர்ச்சை பேச்சு:


கடந்த 2021 ஆண்டு குன்னூர் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதியாக இருந்த பிபின் ராவத் மரணமடைந்தார். 


 ஹெலிகாப்டர் விபத்தை சுட்டி காட்டி, தமிழ்நாடு காஷ்மீராக போல மாறி வருகிறது என யூடியூபர் மாரிதாஸ் விமர்சனம் வைத்திருந்தார்.


அதையடுத்து, அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் அவதூறு பரப்பியதாக, மாரிதாஸ் மீது திமுகவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மதுரை சைபர் கிரைம் போலீசாரிடம் புகாரளித்தார். இதையடுத்து மாரிதாஸ் மீது  மதுரை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


வழக்கு ரத்து:


இதனை தொடர்ந்து, மாரிதாஸ் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மறுநாளே, தன் மீதான வழக்கை ரத்து செய்யுமாறு உயர்நீதிமன்ற மதுரை கிளையில், மாரிதாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.


இதை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், மாரிதாஸ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.


மேல்முறையீடு:


இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு காவல்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.


இந்நிலையில், மேல்முறையீட்டு வழக்கானது, உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மாரிதாஸ் மீது, புலன் விசாரணை நடத்த போலீசாருக்கு உரிய அவகாசத்தை உயர்நீதிமன்றம் அளிக்கவில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும், 4 நாட்களில் வழக்கை ரத்து செய்திருப்பது அதிருப்தி அளிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


விசாரணை:


இதையடுத்து, மாரிதாஸ் மீதான விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் விதித்த தடையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் மாரிதாஸ் மீதான விசாரணையை தொடருவதற்கான தடை நீங்கியுள்ளது. 


இதையடுத்து, மாரிதாஸ் மீதான விசாரணையை தமிழ்நாடு காவல்துறை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாரிதாஸ் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.