உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக எளிமையான முறையில் புதிய ரேசன் கார்டை ஆன்லைனிலே விண்ணப்பித்துக்கொள்ளலாம்.


 ரேசன் கார்டு என்பது பொதுமக்களின் மிக முக்கியமான அடையாள ஆவணமாக மட்டுமில்லாமல், அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற வேண்டும் என்றாலும் இன்றியமையாததாக உள்ளது. இதனைப்பயன்படுத்தி ரேசன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை, பாமாயில் மற்றும் மண்ணெண்ணெய் உள்ளிட்ட பொருள்களை மலிவான விலையில் வாங்கமுடியும். இதோடு மட்டுமின்றி வருவாய்த்துறையின் மூலம் பெறப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் குடும்ப அட்டையைக் கொண்டே பெற முடிகிறது. மேலும் பல இடங்களில் இதனை முகவரிச்சான்றாகவும் பயன்படுத்திக்கொண்டுவருகிறோம்.



ஆனால் தற்போது புதிய ரேசன் கார்டைப்பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் ஏற்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மேலும் பலர் இ- சேவை மையங்களில் மூலம் தற்போது புதிய ரேசன் கார்டை வாங்கி வருகின்றனர். இருந்தப்போதும் மக்களுக்கு மேலும் சுமையைக் குறைக்கும் விதமாக ஆன்லைன் மூலமாக ரேசன் கார்டைப் பெறுவதற்கான வழிமுறைகள் உள்ளது. தற்போது ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் கீழ் பெறப்படும் இந்த ரேசன் கார்டுகள் வருகின்ற 2030 ஜூன் 30 வரை செல்லுபடியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  எனவே இந்நேரத்தில் ரேசன் கார்டுகளை ஆன்லைன் விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பிக்க யார் தகுதியுடையவர்கள்? என தெரிந்துக்கொள்வோம்.


இந்தியாவில் உள்ள அனைத்துக் குடும்பத்தினரும் ரேசன் கார்டு பெறுவதற்கு தகுதியானவர்கள். மேலும் ஆதார் அட்டை, மின் ரசீது,  பான் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்றிதழ்,  வங்கி பாஸ்புக் மற்றும் சாதிச் சான்றிதழ் போன்றவை ஆன்லைன் ரேசன் கார்டு விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்களாகும்.



ஆன்லைனில் ரேசன் கார்டு விண்ணப்பிக்கும் முறை:



ரேசன் கார்டு ( ஸ்மார்ட் கார்டு) விண்ணப்பிக்க வேண்டும் முதலில், https://www.tnpds.gov.in/ என்ற இணையதளப்பக்கத்திற்கு செல்ல வேண்டும்.


முகப்புப் பக்கத்தில் உள்ள ஸ்மார்ட் கார்டு என்ற ஆப்சனைக் கிளிக் செய்ய வேண்டும்.


இதனையடுத்து, அந்த பக்கத்தில் ஒரு படிவம்(Form) திரையில் தோன்றும்.


பின்னர் அந்தப்படிவத்தில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் நிரப்ப வேண்டும். இதோடு அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் இணைக்க வேண்டும்.


குடும்ப உறுப்பினர்களின் விபரங்கள், எரிவாயு இணைப்புகள் போன்ற விபரங்களையும் கொடுத்தப் பின்னர் கிளிக் செய்ய வேண்டும்.


இதனையடுத்து உங்களுக்கு ஒரு Reference எண் கிடைக்கும். அதை மறக்காமல் குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.


இந்த அனைத்து வேலைகளையும் முடித்த பின்னர், உங்களுடைய அனைத்து விபரங்களையும் சரிபார்ப்பார்கள்.


இறுதியில் அதிகாரிகளின் சரிபார்ப்பு முடிந்ததும், உங்களுடைய ரேசன் கார்டு உங்களுடைய வீட்டிற்கே டெலிவரி செய்யப்படும்.



இதுபோன்ற எளிய முறைகளைப் பயன்படுத்தி ஆன்லைன் வாயிலாக இனி மேல் ரேசன் கார்டை எளிமையாகப் பெற்றுக்கொள்ளுங்கள்.! குறிப்பாக இந்த ஆன்லைன் வாயிலாகவே உங்களது முகவரியையும், குடும்ப உறுப்பினர்களின் பெயர்களை நீங்கள் சேர்க்கவும் மற்றும் நீக்கவும் செய்யமுடியும்.