2023 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவுக்கு வருகிறது. தற்போது தான் 2023 ஆன் ஆண்டு தொடங்கியது போல் இருந்தாலும் இன்னும் 6 நாட்களில் புத்தாண்டு விடிகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ஏராளமான, வரலாற்றில் இடம்பெரும் சம்பவங்கள் நடந்துள்ளது. பலரது வாழ்க்கை உச்சமடைந்துள்ளது, பலரது வாழ்க்கை தலைகீழாக மாறியுள்ளது. அரசியல் முதல் இயற்கை பேரிடர் வரை பல்வேறு சம்பவம் நடைபெற்றுள்ளது. அவற்றை பற்றி ஓர் அலசல்..


ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் செல்லும்:


தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். இந்த போட்டியின் போது மாடுகள் துன்புறுத்தப்படுவதாக பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மே மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தடை விதிக்க முடியாது என்றும், தமிழ்நாடு அரசு இயற்றிய சட்டம் செல்லும் என்றும் தீர்ப்பு வழங்கியது.


தமிழகம் vs தமிழ்நாடு:


தமிழ்நாடு என்ற சொல்லை விட தமிழகம் தான் சரியானது என்ற கருத்தை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். கருத்து தெரிவித்தது மட்டுமல்லாமல் அவர் கலந்துக்கொண்ட நிகழ்ச்சிகளிலும் அவர் தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு பதிலாக தமிழகம் என பயன்படுத்தினார். ஆளுநரின் இந்த செயலுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முதல் அமைச்சர்கள் வரை அனைவரும் கடுமையான கண்டனங்கள் தெரிவித்தனர்.


ஆளுநர் ஆர்.என் ரவிக்கு எதிரான தனி தீர்மானம்:


தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்படும் தீர்மானங்களை ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டு இருந்தார். அதுமட்டுமின்றி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், நிலுவையில் வைத்திருக்கும் மசோதாக்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டதே ஆகும் என கூறியிருந்தார். இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கண்டனங்கள் தெரிவித்தார். அதோடு தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநருக்கு எதிராக தனி தீர்மானத்தை கொண்டு வந்தார். இதனை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார். பின் குரல் வாக்கெடுப்பு மூலம் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை ஏற்று இந்த தீர்மானம் விவாதத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.


கலைஞர் நூற்றாண்டு விழா:


கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா ஓர் ஆண்டு காலம் வரை கொண்டாடப்படும் என தமிழக அரசு தரப்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அந்த வகையில் ஜூன் 3 ஆம் தேதி சென்னையில் கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டது. மேலும், கலைஞரின் சொந்த ஊரான திருவாரூரில் கலைஞர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது. அதேபோல், மதுரையில் ரூ.215 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கலைஞர் நூற்றாண்டு நூலகம் மக்களுக்காக திறக்கப்பட்டது.


நாகை முதல் இலங்கை வரை பயணிகள் கப்பல் சேவை:


நாகப்பட்டினம் முதல் இலங்கை வரையிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த இந்த கப்பல் சேவை மத்திய அமைச்சர் சர்பானந்த் சோனோவால் மற்றும் அமைச்சர் எ.வ வேலு திறந்து வைத்தார். காலை 7.30 மணிக்கு நாகையிலிருந்து புறப்படும் கப்பல் 12 மணிக்கு இலங்கைக்கு சென்றடையும். மீண்டும் மதியம் 2 மணிக்கு இலங்கையில் இருந்து புறப்படும் கப்பல் மாலை 6 மணிக்கு நாகைக்கு வந்தடையும்.


தமிழ்நாட்டின் தலைமை செயலாளர் முதல் டி.ஜி.பி வரை:


இந்த ஆண்டும் பல்வேறு நிகழ்வுகள் நடந்திருந்தாலும் தமிழ்நாட்டு அரசில் இரண்டு முக்கிய நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது. தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதில் இருந்து தலைமை செயலாளராக இறையன்பு பதவி வகித்து வந்தார். அவருக்கு 60 வயது பூர்த்தி அடைந்த நிலை ஜூலை 1 ஆம் தேதி சிவ்தாஸ் மீனா புதிய தலைமை செயலாளராக பதவியேற்றார். அதேபோல் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபு பணி ஓய்வு பெற்று தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக சங்கர் ஜிவால் நியமனம் செய்யப்பட்டார்.


பங்காரு அடிகளார் மறைவு:


மேல்மருவத்தூர் கோயிலில் இருக்கும் கருவறையில் பெண்கள் பூஜை செய்யலாம் என அனுமதி வழங்கி ஆன்மீக உலகில் மாற்றத்தை கொண்டு வந்தவர் பங்காரு அடிகளார். இவர் அக்டோபர் 19 ஆம் தேதி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு அரசு 21 குண்டுகள் முழங்க அரசு மறியாதை செலுத்தப்பட்டது.


செந்தில் பாலாஜி முதல் பொன்முடி வரை:


தமிழ்நாடு அரசியலை உளுக்கிய வழக்குகள். மின் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தரப்பில் பிணைக்கோரி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாலும் தற்போது வரை அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டு வருகிறது.


அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரம் அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், சொத்து குவிப்பு வழக்கில், முன்னாள் அமைச்சர் பொன்முடி குற்றவாளி என உயர்நீதிமன்றம் தரப்பில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. மேலும், 3 ஆண்டுகள் சிறை மற்றும் 50 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு வழங்கப்பட்டுள்ளது.


சென்னையை புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல்:


டிசம்பர் மாதம் என்றாலே பேரிடர் மாதம் என மக்கள் மனதில் ஆழமாக பதிவாகியுள்ளது. சுனாமி, 2015 வெள்ளம் என அடிமேல் அடி விழுந்துக்கொண்டு தான் இருக்கிறது. அதேபோல் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியதும் சென்னையில் மிக்ஜாம் புயலின் காரணமாக சுமார் 40 செ.மீ அளவு மழை பதிவானது இதனால் சென்னை மாநகரமே ஸ்தம்பித்து போனது, ஏராளமான மக்கள் தங்களது வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். தற்போது மெல்ல மெல்ல மக்கள் அதிலிருந்து மீண்டு வருகின்றனர்.


தென் மாவட்டங்களை சூரையாடிய மழை:


சென்னையில் மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து மக்கள் மீள்வதற்கு முன் தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய 4 தென் மாவட்டங்களில் வளிமண்டல சுழற்சி காரணமாக வரலாறு காணாத மழை பதிவானது. இதன்  காரணமாக 4 மாவட்டங்கள் வெள்ளக்காடாய் மறியது. அங்கு இன்னும் ஒரு சில தாழ்வான பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணிகள் மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.