துக்ளக் இதழின் 52 வது ஆண்டு விழா நிகழ்ச்சியானது சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். 


அவர் பேசும் போது, “ 30 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் முழுமையாக தமிழில் பேசுகிறேன். தாய்மொழி என்னை விடாது. நானும் என் தாயை விடமாட்டேன். இந்தியை கற்று கொண்டதால் தமிழை நான் மறக்கவில்லை. இன்றும் என்னால் இந்தியை முழுமையாக பேச முடியவில்லை. 


காங்கிரஸ் தலைமறைவு அரசியலில் ஈடுபட்டு வருகிறது. நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இடதுசாரி தீவிரவாத சக்திகளுடன் காங்கிரஸ் கட்சி தொடர்பு வைத்துள்ளது. கொரோனா காலத்தில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு கொரோனா தடுப்பூசி பிரச்சாரத்தை முன்னெடுத்த போது,  காங்கிரஸ் கட்சி  பொதுமக்களிடையே தடுப்பூசி தயக்கத்தை உருவாக்கியது.    



                                                               


 


காங்கிரஸை சாடிய நிர்மலா சீதாராமன் 


காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கொரோனா தடுப்பூசி டோஸ்களை போட்டுக்கொண்டார்களா, அவர்கள் அது குறித்து எங்காவது பேசினார்களா.. இப்போது கூட எங்களுக்கு தெரியாது. கொரோனா தொற்று தாக்கம் இருந்தபோதும் கூட நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. கொரோனா காலத்தில் நமது நாட்டின் பிரதமராக மோடி இருந்ததற்காக நான் நன்றி கூறுகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்பதை என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.


தவறான பிரச்சாரம் 


தமிழக அரசிற்கு வழங்க  வேண்டிய நிலுவைத் தொகையை நாங்கள் வழங்கவில்லை என்று சொல்வது தவறு. 2020, 2021 ஆம் ஆண்டுகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியின் நிலுவைத் தொகை சுமார் 78,000 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது. இந்தத்தொகையானது  அனைத்து மாநிலங்களுக்கும் விரைவில் வழங்கப்படும்.  உயர் சாதியினரை மட்டுமே பாஜக கொண்டுள்ளது என தவறாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. 


2014 ஆண்டு தேர்தலில் 131 பட்டியல் இன சாதி, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் 66 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 2019 தேர்தலில் அது 77 ஆக  அதிகரித்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் சிற்பி அம்பேத்கருக்கு பல நினைவிடங்களை அமைத்தது பாஜக அரசுதான். இந்தி திணிக்கப்படவில்லை. இந்தி கற்றுக்கொண்டு பேசினால் தவறில்லை. ஆங்கிலம் பேசும் அளவிற்கு இந்தி பேச முடியவில்லை என்பது வருத்தமாக உள்ளது. திராவிட இயக்கம் இந்தி கற்றுக்கொள்ளும் தனிமனித உரிமையை பறித்தது” என்றார்.