உலக மண் தினத்தை முன்னிட்டு 'மண் காப்போம்' இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் டிசம்பர் 5-ஆம் தேதி நடைபெற உள்ளன. இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற உள்ளது. இதில் காவேரி கூக்குரல் இயக்கத்தின் மாநிலங்கள் ஒருங்கிணைப்பாளர்   தமிழ்மாறன் பங்கேற்று அந்நிகழ்ச்சிகள் தொடர்பான தகவல்களை பகிர்ந்தார்.


இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “உலக மண் தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சார்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 5-ம் தேதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.


குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் வருகின்ற 5-ம் தேதி காலை 8 மணி முதல் 9 மணி வரை பேருந்து நிலையம், ரயில் நிலையம், கடற்கரை உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது.


மண்ணுக்காக நடப்போம்' 'மண்ணுக்காக நிற்போம்' 'மண்ணுக்காக சைக்கிள் பேரணி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் தமிழ்நாடு முழுக்க மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வ தொண்டர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்த திட்டமிட்டுள்ளனர். சென்னையில் மடிப்பாக்கம் ஏரிக்கரை, எலியட்ஸ் கடற்கரை, மீனாட்சி கல்லூரி, கபாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட மதுரை தேவர் சிலை, வேலூர் கோட்டை, ஓசூர் ரயில் நிலையம், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது. அதே தினத்தன்று இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.


மண் வள பாதுகாப்பு குறித்து சட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனர் சத்குரு அவர்கள் மண் காப்போம் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தை தொடங்கி உள்ளார். தற்போது விவசாய மண்ணில் கரிமச்சத்தின் அளவு 0.5% என்ற அபாயகரமான அளவில் உள்ளது. இதனை குறைந்தபட்ச அளவான 3 முதல் 6% வரை அதிகரிக்க வேண்டும். இல்லையெனில் உணவுப் பற்றாக்குறை, பருவநிலை மாற்றம், வாழ்வாதார இழப்பு, மக்கள் இடம்பெயர்தல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் உருவாகும்.


மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து தனது மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், உள்ளிட்ட பல ஐரோப்ப நாடுகளுக்கு பயணித்துள்ளார். அந்த நாடுகளில் வேளாண் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள், அரசியல் தலைவர்கள், விஞ்ஞானிகள், சினிமா பிரபலங்கள், ஊடக துறையினர் என பல்வேறு தரப்பினர் சந்தித்து கலந்துரையாடினார். ஐரோப்பாவில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்ற அவர் இந்தியாவிற்கு வந்து தமிழ்நாட்டில் தனது பயணத்தை நிறைவு செய்தார்.


சர்வதேச அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் மண் காப்போம் இயக்கம் 300 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆதரவைப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.” என தெரிவிக்கப்பட்டிருந்தது.