கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி- மகாகவி பாரதி. 


அழகு சொட்டும் ஓர் எழுத்து இலக்கிய வடிவமே கவிதை. குடும்பம், உறவு, சமுதாயம், உலகம் என கவிதைக்குப் பாடு பொருட்கள் அதிகம். மகிழ்ச்சி, துக்கம், ஏக்கம், வலி, பெருமிதம் என கவிதையில் உணர்ச்சிகளும் ஏராளம். 


ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21ஆம் தேதி உலக கவிதை தினம் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோ 1999ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிப்பின்படி இந்த தினம் கொண்டாடப்படுகிறது. கவிதை வெளிப்பாடு மூலம் மொழி பன்மைத்துவத்தை ஆதரிக்கும் வகையிலும், அழியும் நிலையில் உள்ள மொழிகளின் குரலைக் கேட்கச் செய்யவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. உலகம் முழுக்க கவிதையை வாசிக்கவும், எழுதவும், வெளியிடவும் கற்பிக்கவும் இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 


ஆரம்பத்தில் ரோமானியக் கவிஞர் விர்ஜில் நினைவாகக் கொண்டாடப்பட்ட கவிதை தினம், யுனெஸ்கோ அறிவிப்புக்குப் பிறகு மார்ச் 21ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. எனினும் நிறைய நாடுகளில் பாரம்பரியமாக அக்டோபர் மாதத்தில் கவிதை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.


நுண் உணர்வுகள்


கவிஞர்கள் தோன்றுவதும் மறைவதும் காலம் காலமாகத் தொடர் நிகழ்வாய் இருக்கிறது. ஆனால் அவர்கள் படைத்த காவியங்களுக்கு என்றும் அழிவில்லை. மனதின் நுண் உணர்வுகளைக் கலைஞர்கள் வார்த்தைகளின்வழியே கவிதையாக கச்சிதமாய் வடிக்கின்றனர்.  


பாரதியார், பாரதிதாசன் தொடங்கி கண்ணதாசன், வாலி, வைரமுத்து, நா.முத்துக்குமார், தபூ சங்கர் என கவிஞர்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. 






எதைக் கேட்டாலும்


வெட்கத்தையே பதிலாகத் தருகிறாயே...


வெட்கத்தைக் கேட்டால் என்ன தருவாய்..? என்பார் தபூ சங்கர்.


மழை மட்டுமா அழகு, 
சுடும் வெயில் கூட தான் அழகு. 
மலர் மட்டுமா அழகு, 
விழும் இலை கூட ஒரு அழகு! என உலகின் எல்லா பரிமாணங்களையும் ரசிக்க வைத்தார் நா.முத்துக்குமார்.



மலைகள் மண் மாதாவின் மார்பகங்கள் ...
இவ்வளவு பெரியதா? என்று ஆச்சரியப்பட வேண்டாம் 
எவ்வளவு மேகக் குழந்தைகள்?
அத்தனைக்கும் பாலூட்ட வேண்டாமா? என்று கவிதையிலேயே குறும்பைப் புகுத்தினார் வாலி. 


சிந்திக்க வைக்கும் கவிதைகளை எழுதவும் அவர் தவறவில்லை. 


தன் தலையைச் சீவியவனுக்கே 
தண்ணீர் தருகிறது இளநீர் 


*


தன் தோலை உரித்தவனின் கண்களில் 
நீர் வர வைக்கிறது வெங்காயம்! என்றார் வாலி. 


எங்கேயோ திடீரென நாம் வாசிக்க நேரும் கவிதை, நம்மை வருடிச் செல்கிறது. புன்னகைக்க வைக்கிறது. சோகத்தில் ஆழ்த்துகிறது. மறைந்து கிடந்த காயத்தைக் குத்திக் கிளறுகிறது. யாரோ ஒருவரை நம் நியாபகக் கற்றையில் இருந்து மீட்டெடுக்கிறது. பால்யத்துக்குக் கைபிடித்துக் கூட்டிச் செல்கிறது. நேசத்துக்கு உரியவருக்கு, 'என்னை அனுப்பு' என்று சொல்கிறது. 


ஓவியம், புகைப்படம் என கலை வடிவங்களில் முக்கியமான ஒன்று கவிதை. மானுட உணர்வுகளின் வடிகாலாய் காலத்துக்கும் அழியாது நிற்கிறது.


கவிதை தினமான இந்த நன்னாளை, கவிதை எழுதியோ, பிடித்த கவிதைகளைப் பகிர்ந்தோ கொண்டாடுவோம்.


*


இதையும் வாசிக்கலாம்: 12ஆம் வகுப்பு, 10ஆம் வகுப்பு பாடங்களின் மாதிரி வினாத் தாளைக் காண: https://tamil.abplive.com/topic/question-bank/amp என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.