பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளராக இருந்தவர் ஹெச்.ராஜா. அரசியல் களத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் அவர். தமிழர்களால் பெரிதும் மதிக்கப்படும் தந்தை பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று சொல்லி சர்ச்சையை ஏற்படுத்தியவர். கடும் எதிர்ப்பு கிளம்பியவுடன் ”அதை நான் பதிவிடவில்லை. என் அட்மின் தான் பதிவிட்டார்” எனக்கூறி சமாளித்தார். பட்டுக்கோட்டையில் தன்னிடம் கேள்வி எழுப்பிய செய்தியாளரை பார்த்து ANTI INDIAN என சாடி கடும் எதிர்ப்பை எதிர்கொண்டா.
2018 ஆம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஹெச்.ராஜா உயர்நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசி வழக்கை எதிர்கொண்டு வருகிறார். அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காரைக்குடி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார் ஹெச்.ராஜா தேர்தல் நிதியில் முறைகேடு செய்து விட்டதாக சிவகங்கை, காரைக்குடி பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகளே பரபரப்பு புகாரை தெரிவித்தனர். ஹெச்.ராஜா மீது குற்றம்சாட்டி சிவகங்கை மாவட்டத்திலிருந்து பலர் கட்சியிலிருந்தும் விலகினர். சிலர் நீக்கம் செய்யப்பட்டனர்.
தற்போது கட்சிப் பதவியின்றி இருக்கும் ஹெச்.ராஜா, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிவுக்கு பிறகு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்தார். ”பிடிஆர் வாயை மூடாவிட்டால் அவரது பூர்வீகம் குறித்த உண்மையை பேச நேரிடும்” எனக் கூறினார். அதுபோல், ”மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லாதான் நடிகர் சிவகார்த்திகேயன் தந்தையின் மரணத்துக்கு காரணம்” என குற்றம்சாட்டினார். இதனை எதிர்த்து ஹெச்.ராஜா மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார் ஜவாஹிருல்லா.
அதன் பின்னர் சற்று அமைதியாக இருந்த ஹெச்.ராஜா மீண்டும் தனது சர்ச்சை கருத்துக்களின் மூலம், விவாதப் பொருளாகி இருக்கிறார். மோகன் ஜி இயக்கிய ருத்ர தாண்டவம் படித்தின் சிறப்புக் காட்சியை பார்த்துவிட்டு சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா, ”இந்து இல்லாமல் தமிழ் எங்கிருந்து வந்தது? நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் அம்மா தமிழச்சியா… அவர் ஒரு மலையாளி. நீங்கள் அனைவரும், PRESSTITUTES. என்னை பீகாரின் என்கிறான் ஒரு முட்டாள். நான் பச்சை தஞ்சாவூர் காரன்.” என்று சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறினார். அதே போல் திராவிட இயக்க தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியனை கடும் சொற்களால் விமர்சித்துப் பேசினார்.
ஹெச்.ராஜாவின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். சென்னை பிரஸ் கிளப்(CPC), மாற்றத்திற்கான ஊடகவியலாளர் சங்கம் (CMPC) உள்ளிட்ட சங்கங்களும் பத்திரிகையாளர்கள் மீதான ஹெச்.ராஜாவின் விமர்சனத்துக்கு கண்டனம் தெரிவித்தனர். ஹெச்.ராஜா தொடர்பான செய்திகளை புறக்கணிக்க வேண்டும் எனவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதனிடையே ஹெச்.ராஜாவின் வசவு சொற்களுக்கு இலக்கான சுப.வீரபாண்டியனும் பத்திரிகையாளர்கள் மீதான அவரின் விமர்சனத்துக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
காரைக்குடியில் நேற்று பிறந்தநாள் விழாவுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா ” செய்தியாளர்களுக்கு எதிராக நான் ஒன்றும் தவறான வார்த்தையை சொல்லவில்லை. இதே வார்த்தையை மத்திய அமைச்சர் வி.கே.சிங்கும் பயன்படுத்தி இருக்கிறார். அர்த்தம் புரியாமல் யாருக்காவது மனது புண்பட்டிருந்தால் அது வருத்தம் தான். நான் பேசியது தரக்குறைவான வார்த்தை இல்லை என்பதற்கு விக்கிபீடியாவில் விளக்கம் உள்ளது.” என கூறினார்.
இந்த நிலையில், ட்விட்டர் ஸ்பேஸ் உரையாடல் ஒன்றி கருணாநிதியை விட ஸ்டாலின் ஆபத்தானவர் என ஹெச்.ராஜா பேசிய ஆடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. இதற்கிடையே தற்போது ட்விட்டரில் பக்கத்தில் “தர்மமே வெல்லும்” என பதிவிட்டிருக்கிறார். திடீரென ஹெச்.ராஜா இவ்வாறு பதிவிட்டதற்கு என்ன காரணம் இருக்கும் என பலரும் பலவாறு அவரது பதிவின் கீழ் கருத்திட்டு வருகின்றனர்.