கடந்த 27 ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு அரசியலமைப்பு (128வது திருத்தம்) மசோதா 2023, நாரி சக்தி வந்தன் சட்டம் அல்லது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா என்று அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் பாராட்டு:
இந்த மசோதாவை வரவேற்று பல்வேறு கட்சித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில், தற்போது மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், "நமது குடியரசின் வரலாற்றில் ஒரு முக்கியமான நாள் இது. நமது நாடாளுமுன்ற இருக்கை புதிய வீட்டிற்கு மாறி உள்ளது. இந்த புதிய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா மகளிர் இட ஒதுக்கீடு மசோதா. இந்த மசோதா நமது தேசத்தின் மிகப்பெரிய சிறுபான்மையினரான இந்திய பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட நீண்ட கால அநீநிதியை சரி செய்வதற்கு வழிவகுக்கும் என மகிழ்ச்சி அடைகிறேன். இதனை நான் முழு மனதோடு பாராட்டுகிறேன். பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் நாடுகள் எப்போதும் செழிக்கும். இந்த மசோதா மீதான நாடாளுமன்ற விவாதத்தின்போது சில விஷயங்களை முன்வைக்க வேண்டும்.
இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணய நடவடிக்கைக்கு பிறகு தான் நடைமுறைக்கு வருகிறது. இந்த மசோதா மக்களவை மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு மட்டுமே பொருந்தும். இந்த மசோதா மாநிலங்களவையிலும் நீடிக்கப்பட வேண்டும். இந்த மசோதா அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை நடவடிக்கைக்குப் பிறகுதான் நடைமுறைக்கு வருகிறது. இவை இரண்டால் தான் கடந்த காலங்களில் தாமதமாகின. இந்த விஷயங்கள் தற்போது தடையாக இருக்கக் கூடாது. சட்டமன்ற அமைப்புகளில் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கும் நாளை நான் எதிர்நோக்குகிறேன்” என்று பதிவிட்டிருந்தார்.
எப்போது அமல்:
மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வராது. அதாவது, மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறைக்கு பிறகு தான் இந்த ஒதுக்கீடு மசோதாவை செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறப்படுகிறது. இதனால் மகளிருக்கான இந்த 33 சதவீத இடஒதுக்கீடு என்பது 2024 நாடாளுமன்ற தேர்தலில் அமலுக்கு வராது. 2029 நாடாளுமன்ற தேர்தலில் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம் என்று சொல்லப்படுகிறது.