தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பு வகித்து வரும் மு.க.ஸ்டாலின் அடிக்கடி பொது இடங்களில் மக்களை சந்தித்து பேசுவதை வழக்கமாக வைத்துள்ளவர். அரசியல் களத்திற்குள் நுழைந்தது முதல் மு.க.ஸ்டாலின் இதை வழக்கமாக வைத்துள்ளார். மேலும், தற்போதும் தினசரி பூங்காக்கள் அல்லது பொது இடங்களில் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.


இந்த நிலையில், இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, அடையாறில் உள்ள தியோசோபிக்கல் சொசைட்டியில் காலை நடைபயிற்சி மேற்கொண்டார். அங்கு பொதுமக்கள் சிலரும் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தனர். அப்போது, அங்கு நடைபயிற்சியில் ஈடுபட்டிக் கொண்டிருந்த பெண்கள் மற்றும் ஆண்கள் சிலர் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆர்வமாக வந்து பேசினர்.


முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவர்களிடம் மிகவும் சகஜமாக பேசினார். பின்னர், அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். அதில் ஒரு பெண் நீங்கள் முதல்வராக வேண்டும் என்று இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தங்களிடம் வாழ்த்து கூறியதாக, தான் கூறியதை நினைவு கூர்ந்தார். மற்றொரு பெண் விமான நிலையத்தில் ஒரு முறை தங்களுடன் செல்பி எடுத்துக் கொண்டதாக மு.க.ஸ்டாலினிடம் கூறினார்.






 


அப்போது, ஒரு பெண் ஒவ்வொரு விஷயத்தையும் நீங்கள் பார்த்து, பார்த்து செய்கிறீர்கள். அதனால், நாங்கள் எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம். இதுவே தொடர வேண்டும் என்றார். மற்றொரு பெண், உங்களுடைய பேரன் நல்ல முறையில் வெற்றி பெற்று வர வேண்டும். அதைப்பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றார்.


அப்போது, முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் முதலில் பேசிய பெண், கடைசியாக ஒன்று சார். எப்படி இப்படி மார்க்கண்டேயனாகவே இருக்கிறீர்கள்? என்று சிரித்துக்கொண்டே கேட்டார். அவரது கேள்வியை கேட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டுமின்றி அங்கிருந்த அனைவரும் சிரித்தனர். பின்னர் அவர்கள் அனைவருக்கும் நன்றி கூறிவிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் தனது நடைபயிற்சியை தொடங்கினார். இந்த நடைபயிற்சியின்போது சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.


முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுவாகவே தன்னை சந்திக்கும் பொதுமக்களிடம் செல்பி எடுப்பதையும், தொகுதி மற்றும் பொது விழாக்களுக்கு செல்லும்போது இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து உரையாடுவதையும் நீண்ட காலமாக வழக்கத்தில் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


கோடநாடு வழக்கு : கம்ப்யூட்டர் ஆபரேட்டர் தற்கொலையில் தொடங்கியது மறு விசாரணை..