விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த அதி கனமழையால் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மூழ்கியதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். கனமழை காரணமாக தண்டவாளங்களில் வெள்ள நீர் சூழ்ந்திருந்ததால் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட ரயில்கள் படிப்படியாக இயக்கப்படுகின்றன.


வங்கக் கடலில் கடந்த 4 நாட்களாக அனைவருக்கும் போக்கு காட்டி அமைதியாக இருந்து வந்த ஃபெஞ்சல் புயல் தற்போது தன் கோரத்தாண்டவத்தைக் காட்டி விட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் அதி கனமழை கொட்டி தீர்த்துள்ளது. நேற்று காலை ஆரம்பித்த மழை தற்போது வரை இடைவிடாமல் தொடர்ந்து பெய்து கொண்டே இருக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தில் அதிகபட்சமாக 50 சென்டி மீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது. இதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செமீட்டருக்கும் மேல் மழை பெய்துள்ளது.


இதுவரை விழுப்புரம் மாவட்டத்தில் 50 செமீட்டர் அளவுக்கு எப்போதுமே மழை பெய்தது இல்லை. விழுப்புரம் நகரில் வரலாறு காணாத மழைப் பொழிவை ஃபெஞ்சல் புயல் தந்தது. விழுப்புரம் நகரம், மயிலம் பகுதிகள் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. அனைத்து பகுதிகளிலுமே குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


தண்டவாளத்தின் கீழ் பாய்ந்தோடும் வெள்ள நீரின் வேகம் மெல்ல குறைந்திருப்பதயைடுத்து, ரயில் போக்குவரத்து தொடங்கியிருக்கிறது. விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில்கள் 10 கி.மீ. வேகத்தில் பாலத்தைக் கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால், படிப்படியாக ரயில்கள் புறப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் புயல் காரணமாக பெய்த கனமழையால் ரயில்வே பாதைகளில் பல்வேறு இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது.


இதனால் விழுப்புரம் - திண்டிவனம் இடையே மற்றும் விக்கிரவாண்டி - திண்டிவனம் ஆகிய இடங்களில் ரயில் பாதைகளில் சேதம் ஏற்பட்டது. இதனால் இன்று அதிகாலை தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வந்த ரயில்கள் விழுப்புரத்தில் நிறுத்தப்பட்டிருந்தன. இதனால் ரயில் பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டதால், ரயிலில் இருந்த பயணிகள், அதிலிருந்து இறங்கி பேருந்து நிலையம் நோக்கிச் சென்றதால் பேருந்து நிலையத்திலும் ஏராளமான கூட்டம் ஏற்பட்டது.


இதனைத் தொடர்ந்து தற்பொழுது ரயில் பாதை சரி செய்யப்பட்டு ஒவ்வொரு ரயிலாக புறப்படத் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக நெல்லை மற்றும் அனந்தபுரி ரயில்கள் புறப்பட்டுள்ளன. விழுப்புரத்தில் இருந்து சென்னை இடையே உள்ள ரயில் பாதை சரி செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு ரயிலாக சென்னை நோக்கி புறப்படத் துவங்கியுள்ளது. ரயில் நிலையத்தில் காத்திருந்த பயணிகளும், பேருந்தில் செல்லலாம் என்று பேருந்து நிலையத்துக்கு வந்த பயணிகளும் ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர். வழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டதால் கடும் அவதிக்குள்ளான பயணிகள் ஓரளவு நிம்மதி அடைந்துள்ளனர்.


விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் - விக்கிரவாண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட சாத்தனூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் கீழ் வெள்ளநீர் அதிகளவில் சென்றதால், பாதுகாப்புக் கருதி 6 ரயில்கள் விழுப்புரம் ரயில் திங்கள்கிழமை காலை நிறுத்தி வைக்கப்பட்டு, தற்போது படிப்படியாக இயக்கப்பட்டு வருகின்றன.


.ஃபென்ஜால் புயல் கரையைக் கடந்ததன் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்தது. இதன் காரணமாக தென்பெண்ணையாறு, சங்கராபரணி ஆறு, மணிமுத்தாறு போன்ற பல்வேறு ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமான சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்துச் செல்கிறது.


இந்த நிலையில் முண்டியம்பாக்கம் -விக்கிரவாண்டி ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட சாத்தனூர் பகுதியில் ரயில் தண்டவாளத்தின் கீழ் பகுதியில் வெள்ளநீர் அபாயக் கட்டத்தில் சென்றதால், பாதுகாப்புக் கருதி 6 ரயில்களை விழுப்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே துறை நிறுத்தியது.


இதன் காரணமாக திருநெல்வேலியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற நெல்லை விரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து சென்னை எழும்பூர் வரை சென்ற சேது விரைவு ரயில், நாகர்கோயிலிருந்து தாம்பரம் வரை சென்ற அந்தியோதயா விரைவு ரயில், ராமேசுவரத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற விரைவு ரயில், தூத்துக்குடி முத்துநகர் விரைவு ரயில், திருச்செந்தூரிலிருந்து சென்னை எழும்பூர் வரை சென்ற செந்தூர் விரைவு ரயில் ஆகிய 6 ரயில்கள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.


காலை 7 மணிக்குள் இந்த ரயில்கள் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், பிற்பகல் 12.30 மணிக்கு மேல் சாத்தனூர் பகுதியில் தண்டவாளத்தின் கீழ் செல்லும் வெள்ளநீரின் அளவு படிப்படியாக குறையத் தொடங்கியதால், ரயில்களை இயக்க ரயில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி ஒவ்வொரு ரயிலும் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது.


இதுபோல திருவனந்தபுரத்திலிருந்து எழும்பூர் வரை செல்லும் அனந்தபுரி விரைவு ரயிலை விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, வேலூர் வழியாக இயக்க முடிவு செய்த நிலையில், விழுப்புரம் வெங்கடேசபுரம் ரயில் நிலையம் அருகே சென்ற போது, ரயிலைத் தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.


இதையடுத்து வெங்கடேசபுரம் ரயில் நிலையம் அருகிலேயே அனந்தபுரி விரைவு ரயில் நிறுத்தப்பட்டது. இந்த ரயிலில் பயணித்த பயணிகளை பேருந்துகள் மூலம் ரயில்வே நிர்வாகம் விழுப்புரம் அழைத்து வந்து, பின்னர் சென்னைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியது. இதனால் ரயில்கள் மூலம் சென்னைக்கு செல்வதற்காக இருந்தோர் பெரும் அவதிக்குள்ளாகினர்.